மோடியின் ஹெலிகாப்டர் பயண செலவுகளை யார் தருகிறார்கள்?- ம.பி. முதல்வர் கமல்நாத் ஆவேசம்

மோடியின் ஹெலிகாப்டர் பயண செலவுகளை யார் தருகிறார்கள்?- ம.பி. முதல்வர் கமல்நாத் ஆவேசம்
Updated on
1 min read

மோடியின் ஹெலிகாப்டர் பயணச் செலவுகளை யார் தருகிறார்கள் என்று மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜபல்பூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ''மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் எங்கே என்று கேட்டுப் பாருங்கள். அவர் தனது மகனுக்காகத் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருப்பார் என்று தெரியவரும்.

காங்கிரஸ் முதல்வர்கள் அனைவருமே மகன்களைக் குறித்துத்தான் கவலை கொண்டிருக்கின்றனர். அவர்கள் சொந்த மகன்கள் குறித்தே யோசித்துக் கொண்டிருந்தால், எப்படி உங்களின் (மக்கள்) மகன்கள் குறித்துக் கவலைப்பட முடியும்?

அவர்களுக்கு நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மகன்கள் குறித்துக் கவலை இல்லை'' என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடி தரும் விதமாக கமல்நாத் தற்போது பேசியுள்ளார். இதுதொடர்பாக ஏஎன்ஐயிடம் பேசிய அவர், ''பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் பயணங்களின் செலவுகளை யார் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர் தெரியப்படுத்த வேண்டும். டெல்லியில் பாஜக அலுவலகத்தைக் கட்டுவதற்குச் செலவான ரூ.700 கோடியை மோடி எங்கிருந்து பெற்றார்?

இதற்கு அவர் பதில் கூறித்தான் ஆகவேண்டும். அதற்குப் பிறகுதான் அவர் என்னிடம் கேள்விகளைக் கேட்க முடியும்'' என்றார் கமல்நாத்.

29 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நான்காம் கட்டத்தில் ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in