

‘நரேந்திர மோடிஜி இந்துமதம் பற்றிப் பேசுகிறார். ஆனால் தன் குரு எல்.கே.அத்வானிக்கு அவர் என்ன செய்து விட்டார் பாருங்கள். அத்வானியை புண்படுத்தியதோடு இல்லாமல் அவரைக் களத்திலிருந்தே வெளியேற்றி விட்டார். இதைத்தான் அவருக்கு இந்து மதம் போதித்ததா?’ என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
குருவை இப்படி உதாசீனப்படுத்துபவர்கள் இந்து மதத்தின் பாதுகாவலராக எப்படி இருக்க முடியும்? என்று கேட்டுள்ளார் ராகுல் காந்தி.
இந்து மரபில் உன்னதமாக, புனிதமாகக் கருதப்படும் குரு-சிஷ்ய உறவுக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக குருவிடம் மரியாதை குறைவாக நடப்பது இந்து தர்மத்துக்கு எதிரானது. “மோடி இதைச் செய்ததோடு வெறுப்பு, கோபம், துண்டாடுதல் போன்ற கருத்தியலைக் கடைபிடிக்கிறார் என்றார் ராகுல்.
“வெறுப்பு, கோபம், பிளவுறுத்தும் கொள்கையின் அடையாளம் மோடி, மாறாக காங்கிரஸ் சகோதரத்துவம் நேயம், ஒற்றுமை ஆகிய கொள்கைகளைக் கடைபிடிப்பது, இந்தத் தேர்தல் இந்த 2 கொள்கைகளுக்கும் இடையே நடக்கும் மோதலாகும்.
இந்தியாவை இருபெரும் பாதியாக பிளவுபடுத்துகிறார் மோடி, ஒருபாதி அம்பானிக்கு, இன்னொரு பாதி துயரமடைந்த விவசாயிகள், கடும் பிரச்சினைகளுக்குள்ளான வர்த்தகர்கள், மற்றும் ஏழைப் பழங்குடி மக்கள்.
விதர்பாவில் பணமதிப்பு நீக்கம் தொழிற்துறையை அழித்து விட்டது. ஆனால் சோக்ஸிக்கள், நிரவ் மோடிக்கள் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டே ஓடிவிட்டனர்.
ஆனால் விதர்பா விவசாயி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தவில்லை எனில் சிறைக்கு அனுப்பப்படுகிறார். ஆனால் மெகுல் சோக்ஸி, நிரவ் மோடிக்கு சிறையில்லை, ஏன் இந்த அநீதி?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.