ராணுவத்தின் செயல்களை அரசியல்வாதிகள் பயன்படுத்த எதிர்ப்பு: குடியரசுத் தலைவருக்கு 150 முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம்

ராணுவத்தின் செயல்களை அரசியல்வாதிகள் பயன்படுத்த எதிர்ப்பு: குடியரசுத் தலைவருக்கு 150 முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம்
Updated on
1 min read

ராணுவத்தின் செயல்களை, பெயர்களை அரசியல் லாபத்துக்கு அரசியல்வாதிகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு 150 முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த கடிதம் எழுதியதில் முன்னாள் ராணுவத் தளபதி எஸ்.எப் ரோட்ரிக்ஸ், சங்கர்ராய் சவுத்ரி, ஜெனரல் தீபக் கபூர், விமானப்படை மார்ஷல் என்.சி. சூரி. கப்பற்படை முன்னாள் தளபதி லக்ஷ்மி நாராயண் ராம்தாஸ், விஷ்ணு பகவத், அட்மிரல் அருண் பிரகாஷ், அட்மிரல் சுரேஷ் மேத்தா ஆகியோர் முக்கியமானவர்கள்.

சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒரு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘‘பாலக்கோட் தாக்குதலில் நரேந்திரமோடியின் ராணுவப்படை வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி திரும்பியது என்று ராணுவத்தை அரசியல்நோக்கதுத்துக்கு பயன்படுத்தி’’ பேசினார்.

அதுமட்டுமல்லாமல், மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முதன்முதலாக வாக்களிக்கும் இளைஞர்கள்,  பாலக்கோட் தாக்குதல் நடத்திய அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விமானப்படையின் செயலை அரசியல் நோக்கத்துக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையமும் விசாரித்து வருகிறது.

மேலும், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் நடிகையுமான ஊர்மிளா ஆகியோர் விமானப்படை வீரர் அபிநந்தனின் புகைப்படத்தை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினர். இதனால், ராணுவத்தினரின் செயல்களை அரசியல்வாதிகள் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதை கண்டு வேதனை தெரிவித்து, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலின் முதல் கட்டவாக்குப்பதிவுநேற்று நடந்த நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ராணுவத்தின் பெயர்கள், ராணுவத்தின் சீருடைகள், அடையாளங்கள், எந்தவிதமான செயல்கள், ராணுவ வீரர்கள் ஆகியவற்றை அரசியல் நோக்கத்துக்காக, அரசியல் லாபத்துக்காக அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் பயன்படுத்துவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் குடியரசு தலைவர் எடுக்க வேண்டும் என தாழ்வுடன் கேட்கிறோம்.

அரசியல் கட்சிகள், தலைவர்கள் இதுபோன்று ராணுவத்தின் பெயர்களை, செயல்களை தங்களின் அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துவது எப்போதும் இல்லாதது, இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்று அரசியல்வாதிகளின் செயல்கள், பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள், வீராங்கனைகளின்  பணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆதலால், மதச்சார்பற்று, அரசியல்சார்பற்று தேசத்துக்காக பணியாற்றி வரும் ராணுவ வீரர்களின் செயல்களை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in