Published : 06 Sep 2014 12:09 PM
Last Updated : 06 Sep 2014 12:09 PM

ஓணம் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:

திமுக தலைவர் கருணாநிதி:

வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒழிக்கப் பட வேண்டும். ஆணவமும் அகம் பாவமும் அழிக்கப்பட வேண்டும். அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந் துண்ணும் பண்பு முதலிய குணங் கள் பேணி வளர்க்கப்படவேண்டும் என்பதை ஓணம் திருநாள் மனித சமுதாயத்துக்கு உணர்த்துகிறது.

தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் ஓணம் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழவேண்டும் என்பதற்காக அவர்களது உணர்வுகளை மதித்து, தமிழக எல்லையோரம் உள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கும், சென்னை மாநகருக்கும் அரசு விடுமுறை வழங்கியது திமுக அரசு என்பதை மகிழ்வுடன் நினைவுகூர்ந்து, மலையாள மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:

தேசிய சிந்தனை தழைத்து ஓங்கவும் அனைத்து சகோதர, சகோதரிகளும் தேச ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழவும் இந்த ஓணம் பண்டிகை வழிகாட்டும்.

அத்தப்பூ கோலம் போட்டு புத்தாடை அணிந்து ஓணம் சத்ய விருந்து படைத்து பண்டிகையை குதூகலமாகக் கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் உளம் நிறைந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளை பாஜக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர்:

மொழியாலும், பண்பாட்டாலும் தமிழகத்துடன் இணைந்துள்ள மலையாள மக்கள் நம் சகோதரர்களே என்ற மனப்பான்மையுடன் தமிழர்கள் உள்ளனர்.

சமீப நாட்களில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மக்களிடையே கசப்புணர்வு ஏற்பட வாய்ப்பிருந்தும், தங்களின் அன்பால் அதனை வென்றுள்ளனர். இனி வருங்காலங்களிலும் தமிழக - கேரள மக்கள் இடையே எல்லை தாண்டிய நட்புறவு வளரவேண்டும் என்று கூறி, கேரள மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x