Last Updated : 20 Apr, 2019 04:04 PM

 

Published : 20 Apr 2019 04:04 PM
Last Updated : 20 Apr 2019 04:04 PM

மோடி இந்தியாவின் பிரதமரா? இல்லை அம்பானி, அதானியின் மேலாளரா?- சித்து கிண்டல்

மோடி இந்தியாவின் பிரதமரா? இல்லை அம்பானி, அதானியின் தொழில் வளர்ச்சி மேலாளரா? என கிண்டல் செய்திருக்கிறார் காங்கிரஸ் தலைவரும் பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சித்து, "அரசு பொதுத்துறை நிறுவனங்களைக் காட்டிலும் பாஜக தனியார் தொழில் நிறுவனங்கள் மீதே அதீத அக்கறை செலுத்துகிறது.

நான் தேசத்தின் காவலன் என்று மார்தட்டுகிறார் பிரதமர் மோடி. ஆனால் உண்மையில் அந்த பாதுகாவலர் பணக்காரர்களின் வீட்டு வாசலில் அல்லவா காவல் நிற்கிறார். அந்த வீடுகளில் நுழைய ஏழை மக்களுக்கு அனுமதி கிடைக்குமா?

அனில் அம்பானி, கவுதம் அதானி போன்ற தொழிலதிபர்களுடன் 55 நாடுகளுக்குச் சென்றிருக்கிறார் பிரதமர் மோடி.

அப்படிச் சென்ற பயணங்களில் இந்த பெரும் பணக்காரர்களுக்காக பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அவற்றில் 18 ஒப்பந்தங்கள் ராணுவம் தொடர்பானவை.

2015-ல் மோடி ரஷ்யா சென்றபோது அம்பானியும் சென்றார். அப்போது ரூ.7500 கோடி கடன் வைத்திருந்த ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துக்காக ரஷ்யாவிடம் 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ராணுவ ஒப்பந்தத்தைப் பெற்றார் மோடி.

பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார். அங்கு அம்பானியின் நிறுவனத்தை அரசு ஒப்பந்தத்தில் பங்குதாரராக மாற்றினார். ரூ.30000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. 36 போர் விமானங்கள் வாங்க வேண்டிய இடத்தில் 18 விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதுவும் அதிக தொகைக்கு. இதற்கு பிரதமரிடம் ஏதேனும் பதில் இருக்கிறதா?

அம்பானியின் நிறுவனத்துக்கு ரூ.11,000 கோடி கடன் இருந்த போது இது நிகழ்ந்தது. பிரான்ஸ் நிறுவனம் ஒரே தவணையில் ரூ.56,000 கோடி அம்பானி நிறுவனத்துக்கு செலுத்தியது. ரஃபேல் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே இந்தத் தொகை அம்பானிக்கு செலுத்தப்பட்டுவிட்டது.

நான் ஒரு தேசபக்தர் எனக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி பொதுத் துறை நிறுவனங்களை சிதைத்து வருகிறார். தனியார் நிறுவனங்கள் அரசு ஒப்பந்தங்களைப் பெற்று செழிக்க வைக்கிறார்.

பெல், பிஎஸ்என்எல், என்டிபிசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும்போது ரிலையன்ஸ் நிறுவனமோ காலாண்டு வருமானத்தை ரூ.10,000 கோடி ஆவணப்படுத்துகிறது.

மோடி இந்த நாட்டின் பிரதமரா இல்லை அம்பானிக்கும் அதானிக்குமான தொழில் மேம்பாட்டு மேலாளரா என்று தெரியவில்லை" எனப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x