Published : 10 Apr 2019 06:34 PM
Last Updated : 10 Apr 2019 06:34 PM

சிக்கிமில் நாளை தேர்தல்: தொடர்ந்து 6-வது முறையும் வெல்வாரா சாம்லிங்?

சிக்கிம் மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நாளை நடைபெறுகிறது. சாதனைகள் மேல் சாதனைகள் படைத்து, அம்மாநிலத்தில் நீண்டகாலமாக முதல்வர் பதவியில் தொடர்ந்து வரும் சாம்லிங் மீண்டும் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் முதல்வராக இருப்பவர் சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த பவன் குமார் சாம்லிங்.  இந்தியாவில் நீண்ட காலம் தொடர்ச்சியாக முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர் பெரும் மக்கள் ஆதரவை பெற்றவர்.

சிக்கிம் மாநிலத்தை முழுமையாக இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக மாற்றிய பெருமை சாம்லிங்கை சாரும். இதுமட்டுமின்றி இவரது ஆட்சி்க்காலத்தில் தேவையை விட 10 மடங்கு மின்சாரம் தயாரிக்கும் மாநிலம், நாட்டிலேயே சுகாதார சீ்ரகெடு குறைவான மாநிலம், குப்பைகள் இல்லாத மாநிலம் என பல பெருமைகளை சிக்கிம் பெற்றுள்ளது.

இதனால் சிக்கிம் மாநிலத்தில் சாம்லிங் சார்ந்த சிக்கிம் ஜனநாய முன்னணியை தவிர எந்த கட்சியையும் மக்கள் தேர்தலில் தேர்வு செய்வதில்லை. பெரும் மக்கள் செல்வாக்குடன் தொடர்ந்து அவரே முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

சிக்கிமில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது.

சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 306 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 305 பேர் பெண்கள். மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. 32 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டப்பேரவை உள்ளது.

இதில் கடந்த தேர்தலில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி 23 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. பிரேம்சிங் தமங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இருகட்சிகளிடையே தற்போதும் போட்டி நிலவி வருகிறது. மற்ற கட்சிகளுக்கு இங்கு ஆதரவு இல்லை.

மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் யுபிஐ (UBI) எனப்படும் மாதந்தோறும் அடிப்படை ஆதார ஊதியமாக அரசு ஒரு தொகையை மக்களுக்கு வழங்கும்.

வேலைவாய்ப்பு இல்லாதது, முதியவர்கள், ஆதரவற்றோர் என பல காரணங்களுக்காக வழங்கப்படும் மாத ஊக்கத் தொகையை தவிர தனிநபர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த தொகை அடிப்படை ஊதியமாக அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 தனி மனிதர்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் அத்தியாவசிய செலவை கணிக்கிட்டு அதனை அரசே வங்கி கணக்கில் செலுத்துவது தான் இந்த திட்டம். சிக்கிம் மாநிலத்தில் அதிகஅளவு மின்சாரம் உற்பத்தி செய்வதால் தேவை போக மித மிஞ்சிய அளவு இருக்கும் மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் எனவும் சாம்லிங் கூறியுள்ளார்.

சாம்லிங்கின் இந்த அறிவிப்பு சிக்கிம் மக்களிடம் பெரும வரவேற்பை பெற்றுள்ளது.சிக்கிம் மாநிலத்தில் இது செயல்படுத்தப்பட்டால், இந்தியாவில் இதனை செயல்படுத்தும் முதல் பகுதியாக சிக்கிம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பல சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வரும் முதல்வர் பவன்குமார் சாம்லிங் மக்கள் தலைவராக விளங்கி வருகிறார். சிக்கிமில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் சாம்லிங்கை எதிர்க்க முடியவில்லை. வரும் தேர்தலிலும் இதே நிலை தொடரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x