

கன மழை, வெள்ளத்தால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அங்கு சட்டமன்ற தேர்தல் தொடர்பான எந்தவொரு முடிவையும் தேர்தல் ஆணையமே மேற்கொள்ளும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது “ஜம்மு காஷ்மீர் இயற்கை பேரிடரை தேர்தலுடனோ அல்லது அரசியலுடனோ நாங்கள் தொடர்புபடுத்த விரும்பவில்லை. அம்மாநிலத்தில் தேர்தல் தொடர்பான எந்தவொரு முடி வையும் தேர்தல் ஆணையமே மேற்கொள்ளும்” என்றார்.
அவர் மேலும் கூறும்போது, “ஜம்மு காஷ்மீர் எல்லையில் ராணுவ நிலைகள் எதுவும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டதாக தகவல் இல்லை. எல்லையில் அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
நமது ராணுவம், துணை ராணுப்படை மற்றும் பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வரும் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன்” என்றார்.