

தெலங்கானா மாநிலத்தில் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு உறங்கிய ஓட்டுநர் கண் விழித்துப் பார்த்த போது பேருந்தைக் காணாமல் அதிர்ச்சியில் உறைந்தார்.
குஷைகுடா பேருந்து டெப்போவைச் சேர்ந்த மெட்ரோ எக்ஸ்பிரஸ் பேருந்து திடீரென மாயமானது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தைக் கண்டுபிடிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுநர் ஜே.வெங்கடேஷ் இரவுப்பணிப் பார்த்துக் கொண்டிருந்தார். மத்திய பேருந்து நிலையத்தில் இவர் இரவு மணி 11.30 அளவில் பேருந்தை நிறுத்தி விட்டு தூங்கச் சென்று விட்டார், இதன் பிறகு காலை 5 மணிக்கு அடுத்த டிரிப் எடுத்தால் போதும் என்று தூங்கப் போயுள்ளார்.
காலையில் எழுந்து பார்த்த போது பேருந்தைக் காணவில்லை என்று திடுக்கிட்டார். வேறு யாராவது ஓட்டுநர் எடுத்து சென்றார்களா, அல்லது வேறு இடத்தில் நிறுத்தியிருக்கிறார்களா என்று தேடியுள்ளார். ஆனால் இது அல்ல விஷயம் என்று சந்தேகம் கொண்ட வெங்கடேஷ் மேலதிகாரிகளுக்குத் தகவல் அளிக்க அப்சல்கஞ்ச் போலீசாருக்கு புகார் அளித்தனர்.
8 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடிய இந்த பேருந்தில் பேருந்தை ஸ்டார்ட் செய்யும் சாவி இல்லை. புதிய பேருந்துகளுக்குத்தான் சாவி உண்டு. ஆகவே ஸ்டார்ட் பொத்தானை அழுத்தினால் வண்டி ஸ்டார்ட் ஆகிவிடும், ஆகவே ஓட்டுநர் சாவியை வண்டியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் இடமில்லை.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் போக்குவரத்துத்துறை புகார் அளித்துப் பேசியுள்ளது. சிசிடிவி கேமராக்கள் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் அரசு பேருந்து மர்மமான முறையில் மாயமாகியிருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.