Last Updated : 25 Apr, 2019 06:57 PM

 

Published : 25 Apr 2019 06:57 PM
Last Updated : 25 Apr 2019 06:57 PM

நம் வலி நம்மோடு, நம் போராட்டம் நம்மோடு... யாருக்கும் எங்கள் வாக்கு கிடையாது: விரக்தியிலும் வேதனையிலும் நிர்பயா பெற்றோர்

டிசம்பர் 16, 2012 இந்தியாவை மட்டுமல்ல உலகையே உலுக்கிய ‘நிர்பயா’ பாலியல் பலாத்காரச் சம்பவம் நிகழ்ந்த நாள். பாதிக்கப்பட்டப் பெண் சம்பவ தினத்துக்கு 11 நாட்களுக்குப் பிறகு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

அவரது பெற்றோர் இடிந்து போயினர்... நாடு முழுதும் கொந்தளித்தது... போராட்டங்கள் வெடித்தன... குற்றவாளிகள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். மரண தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

 

இந்நிலையில் நாட்டில் தேர்தல் காய்ச்சல் அடித்துக் கொண்டிருக்கிறது, அனைவரும் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்று ஜனநாயகத்தைப் பற்றி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நினைவுக்கு வரும் அரசியல்வாதிகள் மக்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

 

இந்த தேர்தல் ஜுரம் டெல்லியிலும் உச்சத்திற்கு சென்ற நிலையில் தன் பெண்ணை இழந்த நிர்பயாவின் பெற்றோர், ‘இந்த முறை எந்தக் கட்சிக்கும் ஓட்டு கிடையாது’ என்று விரக்தியில் பேசியுள்ளனர்.

 

நிர்பயா என்று அழைக்கப்படும் அந்தப் பெண்ணின் பெற்றோர் ஆஷா தேவி, பத்ரிநாத் சிங் கூறியதாவது:

 

அரசியல் கட்சிகளின் நீலிக்கண்ணீரும் பச்சாதாப உணர்வும் வெறும் அரசியல் வேஷம். குற்றவாளிகள் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றனர். சிசிடிவி கேமராக்கள் இன்னமும் கூட நகரின் பல இடங்களில் வைக்கப்படவில்லை. நாடு இன்னமும் கூட பாதுகாப்பற்றுதான் உள்ளது. வெளியே சென்ற பெண்கள் வீட்டுக்கு திரும்பும் வரையில் தாய்மார்கள் இன்னமும் தங்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் காத்திருக்கிறார்கள்.

 

மக்களுக்கு இந்த அமைப்பின் மீது நம்பிக்கை போய் விட்டது. எங்களை அனைத்து அரசுகளும் ஏமாற்றி விட்டன. எந்தக் கட்சிக்கும் ஓட்டு போடவேண்டும் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்படவில்லை.

 

எதுவும் மாறவில்லை. என்னுடைய வாக்கை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட எங்களுக்கு ஏற்படவில்லை. இந்த அமைப்பின் மீதான எங்கள் நம்பிக்கை குலைந்து விட்டது.

 

எல்லாக்கட்சிகளும் பெண்களின் மாண்பு, பெண்களுக்கு அதிகாரம் என்று வாய் கிழிய பேசுகின்றனர், ஆனால் இவர்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் சங்கல்பம், விருப்புறுதி அவர்களுக்கு இல்லை. கடைசியில் நம் வலி நம்மோடுதான் நம் போராட்டம் நம்மோடுதான் யாருடைய உதவியும் இல்லாமல் தனித்து நம்மோடு நாமாக ஒடுங்கி விடுவதுதான் நடக்கும்.

 

தேர்தல்கள் அரசியல் கட்சிகளுக்கு பொள்ளல் வாக்குறுதிகளை அளிக்க வாய்ப்பளிக்கிறது. அவர்கள் சுயநலன்களுக்காக மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். வாக்குறுதிகளை குளிர்பதன அறைக்குள் அடைத்து விடுகின்றனர்.

 

நிர்பயா நிதியம் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.  சூழ்நிலை மோசமாகவே உள்ளது, இன்னும் பலதெருக்களில் விளக்குகள் எரிவதில்லை.  இன்னும் நகரங்களில் பெண்களுக்கு ஆபத்தான் இடங்கள் இருக்கவே செய்கின்றன.  ஆட்டோ டிரைவர்கள் தொலைவான இடங்களுக்கு வர மறுக்கின்றனர் அல்லது ஏகப்பட்ட காசு கேட்டு நச்சரிக்கின்றனர். போலீஸ் ரோந்து இன்னும் அதிகரிக்கப்படவில்லை.

 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x