

விடுதலைப் போராட்டத்தில் வயநாட்டின் பங்கு குறித்து என்ன தெரியும் என்று வயநாட்டை பாகிஸ்தானோடு ஒப்பிட்டுப் பேசிய அமித் ஷா குறித்து கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் பினராயி விஜயன்.
பாஜக தலைவர் அமித் ஷா, சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் தேர்தலில் நிற்பது குறித்து விமர்சித்துப் பேசினார். அதில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் வயநாட்டை பாகிஸ்தானோடு அவர் ஒப்பிட்டுப் பேசினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக கேரளாவின் இடது ஜனநாயக முன்னணித் தலைவரும் மாநில முதல்வருமான பினராயி விஜயன் அமித் ஷாவை கடுமையாக குற்றம் சாட்டினார். மலைநாட்டின் வரலாறு அமித் ஷாவுக்கு என்ன தெரியும் என்று வயநாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி எழுப்பினார்.
வயநாடு தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.சுனீர் என்பவரை ஆதரித்து நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
''அமித் ஷா, வயநாட்டை அவமதித்துவிட்டார். பாகிஸ்தானில் நடப்பதுபோல இங்கு என்ன நடக்கிறது என்பதை அவர் கூறவில்லை.
வயநாடு பற்றி அவருக்கு ஏதாவது தெரியுமா? பிரிட்டிஷாரை எதிர்த்து நடைபெற்ற விடுதலைப் போராட்ட வரலாற்றில் வயநாட்டின் பங்கு என்ன என்பது அமித் ஷாவுக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்திருந்தால், அவர் வயநாட்டை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டிருக்க மாட்டார்.
ஒருவேளை சுதந்திர இயக்கத்தின் வரலாறு பற்றியேகூட பாஜகவினருக்குத் தெரியாமல் இருக்கலாம். சுதந்திரப் போராட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதில் அவர்கள் பங்கெடுத்திருக்க வேண்டும். இதுபோன்ற பேச்சுகளினால் பாஜக தனக்குத்ததானே குழியைத் தோண்டிக்கொள்கிறது.
பழசிராஜாவுடன் கைகோத்து வயநாட்டு பழங்குடி மக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடினார்கள். வயநாட்டில் இடது ஜனநாயக முன்னணியின் முக்கிய நோக்கம் ராகுல் காந்தியை தோற்கடிப்பதாகும்''.
இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.
ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் 4 அன்று வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது ராகுலுக்கு இரண்டாவது தொகுதியாகும். அவர் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அமேதியில் இம்முறை மீண்டும் போட்டியிடுகிறார்.