

முன்னாள் போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவின் மறைவுக்கு தனது சாபம்தான் காரணம் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பிய பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா மன்னிப்பு கோரினார்.
முன்னதாக சாத்வி, 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை எதிர்த்துப் போராடி சண்டையிட்டு அதில் வீர மரணம் அடைந்த தியாகி போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவின் மரணத்துக்கு தன் சாபமே காரணம் என்று கூறியிருந்தார்.
"இந்த ஹேமந்த் கர்காரேதான் என்னை தவறாக குற்றவாளியாக்கினார். நான் அப்போதே அவரிடம் கூறினேன், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று. அவரது பரம்பரையே அழிக்கப்படும் என்று சாபமிட்டேன், அதுதான் 26/11 தாக்குதலில் அவரது மரணத்திற்குக் காரணமாகும்" என்று அவர் பேசியது கடும் எதிர்ப்பை சம்பாதித்தது.
குறிப்பாக சாத்வி பிரக்யாவின் இந்த கூற்றை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு தங்கள் எதிர்ப்பை ட்விட்டரில் பதிவிட்டது.
இந்நிலையில் சாத்வி தனது கருத்தைத் திரும்பப்பெறுவதாகக் கூறியுள்ளார். நான் கூறிய வார்த்தைகளைத் திரும்பப்பெறுகிறேன். இதன் மூலம் நமது தேசத்தின் எதிரிகள் பயனடையும் சூழல் ஏற்படுவதால் இந்த வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன்.
கர்கரே தேசத்துக்காக உயிரை தியாகம் செய்தவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எதிரி நாட்டின் தோட்டா பாய்ந்தே அவர் பலியானர். ஆனால், நான் கூறிய கருத்துகள் எனது தனிப்பட்ட வலியால் வந்தவை. அது தேசத்துக்கு எதிராக அமையும் என்றால் அதனைத் திரும்பப் பெறுகிறேன்" எனக் கூறியுள்ளார்.
யார் இந்த சாத்வி?
இவர் மலேகான் குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் 2008-ல் சிறைக்குச் சென்றவர். 2015-ம் ஆண்டு இவர் மீதான வழக்கை போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் கைவிடுவதாக தேசிய புலனாய்வு மையம் கூறியது.
இருந்தாலும் விசாரணை நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. குண்டுவெடிப்புக்கு சாத்வியின் இருசக்கர வாகனமே பயன்படுத்தப்பட்டிருந்தது என்பதால் அவரை விடுவிக்க நீதிமன்றம் மறுத்தது.
இரண்டு வருட போராட்டத்துக்குப் பின்னர் 2017-ல் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சாத்வி பிரக்யா போபால் மக்களவைத் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் திக் விஜய் சிங் களமிறக்கப்பட்டுள்ளார்.