

மாலேகான் வெடிகுண்டு வழக்கில் சிக்கி விடுதலையான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் இன்று பாஜகவில் இணைந்தார். போபால் தொகுதியில் அவர் பாஜக வேட்பாளராக போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.
கடந்த செப்டம்பர் 2006-ல் மகாராஷ்டிராவின் மாலேகானின் மசூதி அருகே வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இதன் முக்கியக் குற்றவாளியாக சாத்வி பிரக்யா கைது செய்யப்பட்டார். அப்போது, பிரக்யா இந்து தீவிரவாதி என காங்கிரஸால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தனது 14 வயதில் துறவறம் பூண்ட பிரக்யா இந்துத்துவா ஆதரவாளர். மாலேகான் வெடிகுண்டு வழக்கில் இருந்து அவர் சமீபத்தில் விடுதலையானார்.
இந்தநிலையில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போபாலில் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகின. ம.பி. மாநிலம் போபாலில் காங்கிரஸ் சார்பில் அதன் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். போபாலில் கடந்த 1971 முதல் 1984 வரை சங்கர் தயாள் சர்மா போபாலின் எம்.பி.யாக இருந்தார். பிறகு 1989 முதல் அந்தத் தொகுதி பாஜக வசம் இருந்து வருகிறது.
தற்போது இதன் எம்.பி.யாக பாஜகவின் அலோக் சஞ்சார் உள்ளார். இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் அங்கு திக் விஜய் சிங்கை களத்தில் இறக்கியுள்ளது.
இதனால் அவரை எதிர்கொள்ளும் வகையில் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் பாஜக சார்பில் களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரக்யா சிங் தாகூர் இன்று போபால் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சென்று முறைப்படி அக்கட்சியில் இணைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் பாஜகவில் இன்று இணைந்துள்ளேன். எனது கொள்கைகளுடன் பாஜக ஒத்துப்போவதால் அந்த கட்சியில் இணைந்துள்ளேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் முடிவு செய்ய முடியாது. கட்சி தான் முடிவெடுக்கும்’’ எனக் கூறினார்.