கேரளாவில் தற்கொலைப் படை தாக்குதலுக்குத் திட்டமிட்ட இளைஞர்: கைது செய்த என்ஐஏ

கேரளாவில் தற்கொலைப் படை தாக்குதலுக்குத் திட்டமிட்ட இளைஞர்: கைது செய்த என்ஐஏ
Updated on
1 min read

கேரளாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட இளைஞரைத் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''பாலக்காட்டைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ரியாஸ் என்னும் அபூபக்கர் திங்கட்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த 15 இளைஞர்கள் காணாமல் போய் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த ஐஎஸ்ஐஎஸ் காசர்கோடு வழக்கில், இவருக்குத் தொடர்பு உள்ளது.

இலங்கைத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஸக்ரான் ஹஷிம் வீடியோ மற்றும் பேச்சுக்களைத் தொடர்ந்து ரியாஸ் பார்த்து வந்துள்ளார்.

'குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு'

ரியாஸுடன் நடத்திய விசாரணையில், இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதாக சமூக வலைதளங்களில் ஆடியோவைப் பரப்பிய அப்துல் ரஷித் அப்துல்லாவுடன் ஆன்லைனில் தொடர்பில் இருந்துள்ளார். அதேபோல கன்னூர் ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்துல் கயூம் என்கிற அபு காலித் உடன் ஆன்லைன் தொடர்பில் இருந்துள்ளார்.

ஸக்ரான் ஹஷிம் மற்றும் ஸாகிர் நாயக் ஆகியோரின் பேச்சுக்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளார் ரியாஸ். அத்துடன் கேரளாவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தவும் விரும்பி உள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று காசர்கோட்டின் இரண்டு பகுதிகளிலும் பாலக்காட்டிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் 4 தீவிரவாதிகளை என்ஐஏ கைது செய்தது. ரியாஸ் அபூபக்கர் கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். மற்ற மூவரிடமும் ஐஎஸ் தொடர்பு மற்றும் அவர்களின் திட்டங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது''

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in