

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக அன்றைய தினம், பெங்களூர் சிறப்பு நீதி மன்றம் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத் தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என நீதிபதி டி'குன்ஹா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை, கடந்த மாதம் 28-ம் தேதி நிறைவடைந்தது. செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தி ருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் சார்பில், அவரது வழக்கறிஞர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில், “விடுதலைப் புலிகள், முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் ஜெயலலிதா உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்கு மாற்ற வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த மனு தொடர்பாக நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக கர்நாடக அரசிடமும், பெங்களூர் மாநகர காவல் ஆணையரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டது. அதற்கு பெங்களூர் மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி அளித்துள்ள பதில் கடிதத்தில், 'தற்போது வழக்கு நடைபெற்றுவரும் சிட்டி சிவில் நீதிமன்றம் பாதுகாப்பற்றது. இங்கு ஜெயலலிதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க இயலாது. நீதிமன்றத்தை வேறு இடத்துக்கு மாற்றி, 3 நாட்கள் அவகாசம் அளித்தால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர முடியும்' என தெரிவித்துள்ளார்.
எனவே, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தை தற்காலிகமாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடுகிறேன். ஆவணங் களையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதால் வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20-ம் தேதியில் இருந்து 27-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. அன்றைய தினம் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பன்னீர் செல்வம், ''27-ம் தேதி பெங்களூரில் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வந்தால், அவருக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தீர்ப்பு வெளியாகும் தேதியை மாற்ற வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதி டி'குன்ஹா, ''செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அன்றைய தினம் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படும்''என்றார்.