

சர்ச்சைப்பகுதியல்லாத அயோத்தியா கோயில்களில் பூஜை நடத்த அனுமதிக்குமாறு கோரிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ‘நீங்கள் நாட்டை நிம்மதியாக இருக்க விடமாட்டீர்கள் போலிருக்கிறது’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடுமை காட்டி மனுவை தள்ளுபடி செய்தது.
பண்டிட் அமர்நாத் மிஸ்ரா என்பவர் செய்திருந்த கோரிக்கை மனு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் வி.கே.பிஜூ, இது தொடர்பாக முஸ்லிம் மக்களிடமும் அமைப்புகளிடமும் பேசி விட்டோம், “எல்லா அமைப்புகளிடமும் பேசி விட்டோம், சர்ச்சையல்லாத பகுதிகளில் இருக்கும் கோயில்களில் பூஜை செய்ய தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று அவர்கள் கூறினர். மேலும் மனுதாரர் வாய்ப்பு கொடுத்தால் இது தொடர்பாக பலபிரிவினரிடையேயும் பேசவும் தயாராக இருக்கிறார்” என்றார்.
ஆனால் கோர்ட் இந்த வாதங்களை ஏற்க மறுத்ததோடு, மனுவையும் ஊக்குவிக்கவில்லை.
“மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, இது தொடர்பாக பல மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பேச்சுவார்த்தைகளுக்கு எந்த வித சட்ட இடையூறுகளும் இல்லை” என்று உத்தரவிட்டன.