Published : 15 Apr 2019 09:14 AM
Last Updated : 15 Apr 2019 09:14 AM

பொய் செய்திகளைப் பரப்பும் வாட்ஸ் அப் எண்கள் முடக்கம்

மக்களவைத் தேர்தலையொட்டி பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேசிய, பிராந்திய கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் போலி செய்திகள், வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள்  அதிகமாகப் பரப்பப்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் குவிந்து வருகின்றன. வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் சமூக வலைதளங்களில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கக் கோரும் பதிவுகளை 3 மணி நேரத்தில் நீக்க அனைத்து சமூக வலைதளங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. அதன்படி கடந்த 11-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலின்போது தேர்தல் ஆணையம் கோரிய சர்ச்சைக்குரிய பதிவுகள் நீக்கப்பட்டன. அப்போது 500 பேஸ்புக் கணக்குகளும், ஒரு வாட்ஸ் அப் எண்ணும், 2 ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பொய் செய்திகள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பரப்பும் வாட்ஸ் அப் எண்கள் முடக்கப்படும் என்று அந்த செயலியின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொழில்நுட்பரீதியாக பேஸ்புக், ட்விட்டரில் வெளியிடப்படும் சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க முடியும். ஆனால் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்தில் இது சாத்தியமில்லை. எனவே, 'ஸ்கிரீன் ஷாட்' ஆதாரம் மூலம் தேர்தல் ஆணையம் தரப்பில் புகார் அளிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் எண்கள் முடக்கப்படும் என்று அந்த செயலியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப் குரூப்பில் ஒருவருடைய விருப்பம் இல்லாமலேயே அவரை குரூப்பில் சேர்த்துவிட முடியும். இதை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ஒருவரின் விருப்பமில்லாமல் அவரை வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்க முடியாது. மேலும் வதந்திகள், அவதூறுகளை தடுக்க 24 மணி நேர கண்காணிப்பு திட்டமும் அமல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகளாவிய அளவில் மாதந்தோறும் 20 லட்சம் சர்ச்சைக்குரிய கணக்குகள் நீக்கப்பட்டு வருகின்றன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x