

மறைந்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் திவாரியின் கொலை வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் விசாரணைக்குப் பின்னர் போலீஸார் ரோஹித்தின் மனைவிதான் கொலை செய்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார், "அபூர்வாவை நாங்கள் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலும் தடயவியல் துறையினர் கொடுத்த சான்றுகளின் அடிப்படையிலுமே கைது செய்துள்ளோம். அவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். திருமணம் கசந்ததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்" என்று கூறியுள்ளனர்.
நடந்தது என்ன?
மூத்த காவல் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் இது தொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம், "கடந்த ஏப்ரல் 12-ம் தேதி ரோஹித் வாக்களிப்பதற்காக உத்தரகாண்ட் சென்றுள்ளார். பின்னர் ஏப்ரல் 15 அன்று அவர் வீடு திரும்பியுள்ளார். டிபன்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு அவர் வீட்டுக்குள் நுழைவதைக் காட்டுகிறது. அவர் சுவரைப் பிடித்து தள்ளாடி நடந்து வருவதைப் பார்த்தால் அவர் மது அருந்தியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அடுத்த நாள் ரோஹித்தின் தாயார் உஜ்வாலுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. ரோஹித் மூக்கிலிருந்து ரத்தம் கசிவதாக அவரது தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேக்ஸ் மருத்துவமனையிலிருந்து ரோஹித்தின் தாயார் ஆம்புலன்ஸ் அனுப்பியிருக்கிறார். ரோஹித் திவாரியின் மனைவியும் அவரது உறவினர் சித்தார்த் மற்றும் வீட்டுப் பணியாள் ஆகியோர் அப்போது வீட்டிலிருந்தனர்.
ஆனால், ரோஹித் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோதே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 15 இரவு படுக்கைக்குச் சென்றவரை மறுநாள் மாலை 4 மணி வரை யாரும் எழுப்பவே இல்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் அபூர்வா வழக்கை திசை திருப்ப முயன்றார். ஆனால், பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். திருமண வாழ்வு கசந்ததால் அவர் தலையணையால் ரோஹித்தை மூச்சை அடைத்துக் கொலை செய்துள்ளார். இதை அவர் தனியாகவே செய்துள்ளார். பின்னர் தடயங்களை ஒன்றரை மணி நேரத்தில் அழித்திருக்கிறார். அவரது வீட்டில் மொத்தம் 8 சிசிடிவி கேமராக்கள் இருந்தன. அவற்றில் 6 இயங்கவில்லை" எனக் கூறியுள்ளார்.