Last Updated : 25 Apr, 2019 01:41 PM

 

Published : 25 Apr 2019 01:41 PM
Last Updated : 25 Apr 2019 01:41 PM

நாளை வேட்புமனுதாக்கல்: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று பிரம்மாண்ட பேரணி- பாஜக முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

பிரதமர் மோடி நாளை வாரணாசி மக்களவைத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று பாஜக தலைவர்கள் பங்கேற்புடன் மிகப்பெரிய பேரணியை நடத்துகிறார்.

இந்த பேரணியில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பாஜக மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. 3 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கான தேர்தல் கடைசிக் கட்டமாக மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது.

வாரணாசி தொகுதியில் 2-வது முறையாகப் போட்டியிடும் பிரதமர் மோடி நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன் இன்று வாரணாசி நகரில் மிகப்பிரம்மாண்ட முறையில் பேரணி ஒன்றை நடத்துகிறார்.  

வாரணாசியில் உள்ள பனாராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து தொடங்கும் இந்த பேரணி, லங்கா பகுதி, கோடோலியா வரை ஏறக்குறைய 6 கி.மீ தொலைவுக்கு நடத்தப்படுகிறது.

இந்த பேரணியில் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் , பாஜக முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது, ஐக்கியஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் உடன் செல்கின்றனர். மேலும், சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் பிரகாஷ் சிங் பாதல், லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரும் செல்கினறனர். நாளை காலை 11.30 மணி அளவில் வேட்புமனுவை பிரதமர் மோடி தாக்கல் செய்ய உள்ளார்.

வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல் செய்யும் முன், நாளை காலை 9.30 மணிக்கு பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். அதன்பின் 11 மணிக்கு கால பைரவர் கோயிலில் வழிபாடு நடத்துகிறார் பிரதமர் மோடி. அதன்பின் சரியாக 11.30 மணிக்கு வேட்புமனுவை பிரதமர் மோடி தாக்கல் செய்ய உள்ளார்.

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளான அதிமுக, அப்னா தளம், வடகிழக்கு ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும்  பங்கேற்க உள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x