Published : 03 Apr 2019 03:23 PM
Last Updated : 03 Apr 2019 03:23 PM

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாயை, மக்களே நம்ப வேண்டாம்: மாயாவதி சாடல்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகைப்படுத்தப்பட்ட  ஒன்று, அது ஒரு மாயை,நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழிகள் இல்லாதது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரஸ், பாஜக, மாநிலக் கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும், ஆர்ஜேடி 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ரேபரேலி, அமேதி தொகுதியில் மட்டும் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக உ.பியில் தேர்தல் நடத்தப்படுகிறது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தங்களின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், விவசாயக் கடன் தள்ளுபடி, ஜிஎஸ்டி மறுஆய்வு, நீட்  தேர்வு முறை ரத்து உள்ளிட்ட பலவேறு துறைகளுக்கும் பல சலுகைகளுடன் கூடியதாக இருந்தது.

இந்த தேர்தல் அறிக்கை குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி லக்னோவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்த சாத்தியங்கள் இருக்கிறதா. ஏற்கனவே அந்த கட்சி ஏராளமான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்து அதை நிறைவேற்றவில்லை. அப்படி இருக்கும்போது நேற்று வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகைப்படுத்தப்பட்ட ஒன்று, மாயை தோற்றம் கொண்டது.

காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, மக்கள் காங்கிரஸ் கட்சியை இனிமேலும்  நம்பவேண்டாம். வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றாத காரணத்தால்தான் மக்கள் அந்த கட்சியை நம்ப மறுக்கிறார்கள். பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வேறுபாடு ஏதும் இல்லை.

மாநிலத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக் தளம் சேர்ந்து அமைத்த கூட்டணியைப் பார்த்து பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் எங்கள் கூட்டணியை கடுமையாக விமர்சிக்கிறார்கள், சாதிரீதியாக  தலைவர்களை மோசமாக பேசுகிறார்கள். ஆனால், இதுபோன்ற  ஆத்திரமூட்டும் பேச்சுகளால் நிதானத்தை நாங்கள் இழந்துவிடமாட்டோம். தேர்தலில் பாஜகவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x