Last Updated : 23 Apr, 2019 12:19 PM

 

Published : 23 Apr 2019 12:19 PM
Last Updated : 23 Apr 2019 12:19 PM

ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு; ஓட்டம் பிடித்த மக்கள்: கண்ணூர் தொகுதியில் பரபரப்பு

கேரள மாநிலம் கண்ணூர் மக்களவைத் தொகுதியில் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததால், வாக்களிக்க வந்த மக்கள் அங்கிருந்து அலறிஅடித்து ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் கண்ணூர் மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பில் பி.கே. ஸ்ரீமதி, காங்கிரஸ் கூட்டணி சார்பில் கே. சுரேந்திரன், பாஜக சார்பில் கே. பத்மநாபன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை 7 மணிமுதல் கேரள மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு மையத்தில் நீண்டவரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

இந்நிலையில் கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டகை நகரில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்கக் காத்திருந்தனர். அப்போது, வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரத்தில் இருந்து சத்தமும், எந்திரம் ஆடுவதுமாக இருந்தது. அப்போது, திடீரென வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் இருந்து பாம்பு இருப்பதை வாக்களிக்க வந்த ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அந்த வாக்காளர் பாம்பு இருப்பது குறித்து சத்தம் போடவே வாக்களிக்க வரிசையில் இருந்த மக்களும், தேர்தல் அறையில் இருந்த அதிகாரிகளும் அலறியடித்து வெளியே ஓடினர். அதன்பின் போலீஸார், மற்றும் அதிகாரிகள் வந்து ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரத்தில் இருந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்பட்டது. அதன்பின் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்தால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.

கேரள மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறுகள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x