Last Updated : 20 Apr, 2019 05:25 PM

 

Published : 20 Apr 2019 05:25 PM
Last Updated : 20 Apr 2019 05:25 PM

நீதிபதிக்கு மீதம் இருப்பதே மரியாதை ஒன்றுதான்: பாலியல் புகார் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோகய் வேதனை

நீதிபதிக்கு மீதம் இருப்பது மரியாதை மட்டும்தான். ஆனால் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற பாலியல் குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது கூறினால், எந்த விவேகமுள்ள, புத்திசாலியான மனிதர்களும் நீதிபதி பதவியை ஏற்க முன்வரமாட்டார்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனையுடன் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் ரீதியான புகார் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தன்மீதான  பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தார், இந்த வழக்கில் தன் மீதே புகார் இருப்பதால், உத்தரவுகள் ஏதும்  பிறப்பிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

அதன்பின்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பேசியதாவது:

நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி வருகிறேன். அவ்வாறு பணியாற்றியும் என்னுடைய வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது தெரியுமா ரூ.6.80 லட்சம்தான் என் கணக்கில் இருக்கிறது. கவுகாத்தியில் என்னுடைய பூர்வீக வீட்டை செப்பனிடுவதற்கு என்னுடைய மகள் அளித்த ரூ.15 லட்சத்தையும் சேர்த்தால் ரூ.21.80 லட்சம் கணக்கில் இருக்கிறது. என்னுடைய  பிஎப் கணக்கில் ரூ.40 லட்சம் இருக்கிறது இதுதான் என்னுடைய சொத்து.

 என்னை பணத்தால் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதால், இதுபோன்ற குற்றச்சாட்டைக் கண்டுபடித்து என்மீது சுமத்துகிறார்கள். இதற்கு பின்புலத்தில் மிகப்பெரிய சதி இருக்கிறது. மிகப்பெரிய சக்தி பணியாற்றுகிறது. நீதித்துறையின் செயல்பாட்டை குலைக்க சதி நடக்கிறது.

நான் ஏற்கனவே பல கூட்டங்களில் கூறியதைப் போன்று, நீதிபதிகள் இதுபோன்ற பணிச்சூழலின் கீழ் பணியாற்றினால் நிச்சயம் எதிர்காலத்தில் எந்த நல்ல மனிதரும், புத்திசாலியானவரும் நீதிபதி  பொறுப்பே ஏற்க வரமாட்டார்கள். என்னிடம் பணியாற்றும் ப்யூன் கூட என்னைக் காட்டிலும் அதிகமாக பணம் வைத்துள்ளார்.  

என் மீது குற்றச்சாட்டு கூறிய பெண் கிரிமினல் பின்புலம் கொண்டவர். அவர் மீது ஏற்கனவே இரு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் அவர் பணிக்கு வந்தபோது, அவர் மீது எப்ஐஆர் போடப்பட்டது. முதல் தகவல் அறிக்கை நிலுவையில் இருக்கும்போது,  எப்படி அவர் உச்ச நீதிமன்ற பணியில் இருக்க முடியும். மூன்றாவது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டபோதுதான் அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

பிணையில் வெளியே வந்த அந்த பெண் புகார் அளித்தவர்களை மிரட்டி, விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார். அந்த பெண்ணின் கிரிமினல் பின்புலத்தால், அவர் 4 நாட்கள் சிறையில் இருந்தார். ஒழுக்கமான வாழ்க்கை நடைமுறையை பின்பற்றுங்கள் என்று போலீஸார் இருமுறை எச்சரித்தும் அந்த பெண்ணை அனுப்பினார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், எந்த நீதிபதியும் வழக்கை முடிவு செய்யமாட்டார்கள். நானும் இந்த வழக்கில் முடிவு எடுக்க மாட்டேன், ஒதுங்கிக்கொள்கிறேன். வழக்கம் போல் நீதிமன்றத்துக்கு வந்து வழக்கை ஒத்திவைத்துவிட்டுச் செல்வேன்.

நாட்டின் மிக உயர்ந்த பதவியிலான தலைமை நீதிபதி இடத்தில் இருந்து மிகவும் வேதனையுடன் தெரிவிக்கிறேன். நீதிமன்றத்தின் சுதந்திரம் மிக, மிக தீவிரமான அச்சுறுத்தலில் இருக்கிறது. இது மிகவும் துயரான சூழல்.

அந்த பெண் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு நாங்கள் எடுத்தவுடன், அந்த பெண்ணுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீனை ரத்துசெய்ய போலீஸார் முயன்றனர்.

இவ்வாறு தலைமை நீதிபதி கோகய் தெரிவித்தார்.

அப்போது அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறுகையில், " நீதிமன்றத்தில் இதுபோன்று ஏற்கனவே இரு சம்பவங்கள் வந்துள்ளன. முன்னாள் நீதிபதி ஒருவருக்கு எதிராகவும், மூத்த வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராகவும் இதுபோன்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. அந்த இரு வழக்குகளையும் பிரசுரிக்கவோ, ஒளிபரப்பவோ வேண்டாம் என்று ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டோம்.

ஆனால், தலைமை நீதிபதியின் இன்றைய அறிக்கை மிகப்பெரிய அளவில் விளம்பரத்தைப் பெற்றுவிட்டது. புகார்தாரர் பெயர் அதில் வெளியிடக்கூடாதுஎன்று சில வழக்குகளில் இருக்கிறது, நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், குற்றச்சாட்டுகளில் சில ஊடகங்கள் எந்தவிதமான விதிமுறையும் பின்பற்றாமல் பெயரை வெளியிடுகின்றன. " எனத் தெரிவித்தார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், " நீதிபதியை மிரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு எதிராகவும், புகார்தாரருக்கு எதிராகவும் விசாரணை நடத்த வேண்டும். புகார்தாரர் புகார் கொடுத்த ஒரு மணிநேரத்தில் அந்த இணையதளம் முட்டாள்தனமாக செய்தியை வெளியிட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.

வேதனை

அப்போது பேசிய தலைமை நீதிபதி கோகய், " இந்த வழக்கில் மிகுந்த பொறுப்புணர்வுடன், தலைமை நீதிபதியாக இங்கு அமர்ந்திருக்கிறேன். பல்வேறு விஷயங்கள் வெகுதொலைவு சென்றுவிட்டதால், நான் வழக்குத்துக்குமாறாக, அசாதாரண நடவடிக்கையை எடுத்திருக்கிறேன். நீதித்துறையை பலிகடாவாக்க முடியாது. நீதித்துறையின் சுதந்திரம், தனித்தன்மை மிகுந்த கவலைக்குள்ளாகி இருக்கிறது. நாட்டின் நீதித்துறை, நீதிபரிபாலனமுறை ஆகியவற்றில் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்த செய்தியை பதிவிடலாமா வேண்டாமா என்பதை ஊடகங்களின் வரம்புக்குள் விட்டுவிடுகிறேன். நீதிமன்ற உத்தரவுகள் தேவைப்படும்போது பிறப்பிக்கப்படும். பிறகு சந்திப்போம் " என உருக்கத்துடன் தெரிவித்தார்.

ஊடகங்கள் முடிவு செய்யட்டும்

நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில், " இதுபோன்ற வலிதரும் சூழலில் நீதிபதிகள் இந்த வழக்கில் முடிவு ஏதும் எடுக்க முடியாது. முறைப்படி, அந்த பெண் ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்படுவார். இந்த வழக்கில் ஊடங்கங்களுக்கு எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கப்படுவதில் தடுக்கப்பட்டுள்ளோம். ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம். நீதிமன்ற மாண்புக்கு எதிராகவும், நீதிபதிகளுக்கு  அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை பதிவிடலாமா  அல்லது பதிவிடக்கூடாது என்பதையும், விரும்பத்தகாத அந்த செய்தி இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை  ஊடகங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்  " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x