

மத்திய அரசின் விவசாய சாதனை விருது மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப் படுகிறது. இதற்கான போட்டியில் உள்ள ஐந்து மாநிலங்களில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது.
மத்திய அரசு சார்பில், ‘கிரிஷி கர்மான்’ என்ற பெயரில் விவசாய துறைக்கான சாதனை விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஒரு மாநிலத்தின் விவசாய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் இந்த விருதின் ரொக்க மதிப்பு ரூ.2 கோடி. கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு இந்த விருது கிடைத்தது. 2013-14-ம் ஆண்டுக்கான விருதும் மூன்றாவது முறையாக மத்தியப் பிரதேச மாநிலத்துக்கே மீண்டும் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, ‘தி இந்து’விடம் ம.பி. மாநில விவசாயத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இயற்கைச் சீற்றங்களான வெள்ளம், வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டாலும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இங்கு விவசாய வளர்ச்சி அதிகமாக உள்ளது. விவசாயிகள் மற்றும் மாநில அரசுக்கு இடையே உள்ள நல்லுறவு, வளர்ச்சித் திட்டங்களே இதற்கு முக்கியக் காரணம். இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டின் விவசாய வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ம.பி. முதலிடத்தில் இருந்து வருகிறது.
விவசாயிகளை சந்தித்து அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உடனுக்குடன் வழங்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளதும் இத்துறை வளர்ச்சிக்கு முக்கிய காரணம். வரும் அக்டோபர் 14-ல் சாதனைகளை எடுத்துரைக்க வரும் படி மத்திய விவசாயத் துறை அமைச்சக செயலர் மாநில அரசுக்கு அழைப்பு விடுத்துள் ளனர் என அவர்கள் தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேச விவசாய வளர்ச்சி, கடந்த 2011-12-ல் 19.85% ஆகவும் 2012-13-ல் 20.16% ஆகவும் இருந்தது. இது 2013-14-ல் 24.99 சதவீதமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ம.பி.க்கு நிர்ணயிக் கப்பட்ட 2.5 சதவீதத்தை விட பல மடங்கு அதிகமாக 9.04% பெற்றது. இதற்கு வட்டியில்லா விவசாயக் கடன், அமோக விளைச்சல், தடையில்லா மின்சாரம் ஆகியவை முக்கியக் காரணங்கள் என தெரிய வந்துள்ளன.
எனவே இந்த ஆண்டும் மூன்றாவது முறையாக ம.பி.யே ‘கிரிஷி கர்மான்’ விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான போட்டியில் ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்க மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் உள்ளன.