Last Updated : 25 Apr, 2019 01:04 PM

 

Published : 25 Apr 2019 01:04 PM
Last Updated : 25 Apr 2019 01:04 PM

தலைமை நீதிபதிமீது பாலியல்புகார்: நெருப்புடன் விளையாடுகிறீர்கள்; நிறுத்திக் கொள்ளுங்கள்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகாரில் சதி இருப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று கடுமையாகக் கோபப்பட்டனர். நெருப்புடன் சிலர் விளையாடுகிறார்கள், இதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

பாலியல் புகார்

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களைத் தெரிவித்தார்.

இந்தப் புகார்களை உச்ச நீதிமன்றத்தில் உள்ள  22 நீதிபதிகளுக்கும், அந்தப் பெண் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார். இதைத் தொடர்ந்து அந்தப் புகார் சனிக்கிழமை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வில்  விசாரிக்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.

ரூ.1.50 கோடி பேரம்

இதற்கிடையே உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் சிங் ஜெயின்ஸ் என்பவர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சிக்கவைக்கவும், அவரை பதவி விலக வைக்கவும் சதி நடக்கிறது. என்னிடம் அஜெய் என்பவர் சமீபத்தில் அணுகி, தலைமை நீதிபதிக்கு எதிராக போலியாக பாலியல் புகாரைப் பதிவு செய்ய உதவ வேண்டும், பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்காக என்னிடம் ரூ.1.50 கோடி பேரம் பேசப்பட்டது. ஆனால், அதற்கு நான் மறுத்துவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

2-வது பிரமாணப்பத்திரம்

மேலும், நேற்று 2-வது பிரமாணப்பத்திரத்தையும் வழக்கறிஞர் பெய்ன்ஸ் தாக்கல் செய்தார்.அதில் தலைமை நீதிபதிக்கு எதிராக அதிருப்தியாளர்கள், புறச் செல்வாக்குச் சக்திகள் விரித்த சதிவலை குறித்த கூடுதல் ஆதாரங்களை கைப்பட எழுதி இருந்தார். பெய்ன்ஸ் தன் மனுவில் தலைமை நீதிபதிக்கு எதிரான மிகப்பெரிய சதிவலையின் பின்னணியில் ’குறிப்பிட்ட தகவல்’ ஒன்று தன்னிடம் இருப்பதாகவும், இந்த வழக்கின் விசாரணையில் சிபிஐ அமைப்பை ஈடுபடுத்தக் கூடாது என்று என்றும் பெய்ன்ஸ் வலியுறுத்தி இருந்தார்.

சந்திப்பு

முன்னதாக, நேற்று பிற்பகலில் சிபிஐ இயக்குநர், டெல்லி போலீஸ் கமிஷனர், ஐபி தலைமை ஆகியோர் நீதிபதிகளை அவர்களது அறையில் சென்று ரகசியமாகச் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், தீபக் குப்தா ஆகிய சிறப்பு அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் பெயின்ஸ் முழுமையான பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்தார்.

நீதிமன்றத்தை நிர்வகிக்க முயலாதீர்கள்

அதன்பின் நீதிபதி அருண மிஸ்ரா கூறுகையில் " பணவலிமை படைத்தவர்கள் சிலர் இந்த உச்சநீதிமன்றத்தை நிர்வாகம் செய்யவும், நடத்தவும் முயல்கிறார்கள். இதுபோன்ற குற்றச்சாட்டை நாங்கள் மூன்றாவது முறையாகக் கேட்கிறோம். முன்கூட்டியே தீர்ப்பை நிர்ணயிக்கும், விலைக்கு வாங்கும் சக்திபடைத்தவர்கள், நீதிமன்றத்தை விட்டு கண்டிப்பாகச் செல்ல வேண்டும். இந்த விஷயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக கருதுகிறோம். உண்மை வெளிவருவதாக இருந்தால், சிலர் கொலைகூட செய்வார்கள் அல்லது அவதூறு செய்வார்கள்

நீதிமன்றத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த மிகப்பெரிய நெட்வொர்க் வேலை செய்கிறது  நாங்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறோம். நாங்கள் அறிந்தவரை, இதுபோன்ற நேர்மையற்ற முறையில் செயல்படுபவர்கள் மூத்த வழக்கறிஞர்களைத் தான் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்.

நெருப்புடன் விளையாடுகிறீர்கள்

உச்ச நீதிமன்றத்தை ஒருபோதும் நிர்வாகம் செய்ய முடியாது, கட்டுப்படுத்த முடியாது என்பதை நாங்கள் நாட்டின் வசதிபடைத்த, அதிகாரம் படைத்தவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். அவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள், அதை கண்டிப்பாக நிறுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

நீதிபதிகள் நாரிமன், தீபக் குப்தா பேசுகையில், " கடந்த நான்கு ஆண்டுகளாக நீதிமன்றத்தை நடத்தும் விதம் மிகுந்த வேதனையாக இருக்கிறது, இவ்வாறு தொடர்ந்து நடந்தால், நீதிமன்றம் நிலைத்து செயல்படமுடியாது. நீதிமன்றத்தின் மீது அமைப்பு ரீதியான தாக்குதல்நடக்கிறது, அமைப்பு ரீதியாக நீதிமன்றத்தை அவமானப்படுத்த முயற்சி நடக்கிறது " என்று வேதனை தெரிவித்தனர்.

பாரபட்ச விசாரணை

மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிடுகையில், " பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலைமை நீதிபதியை பாதுகாக்கும் நோக்கில் இந்த விசாரணை நடக்கிறது. வழக்கறிஞர் பெய்ன் தாக்கல் செய்த ஆதாரங்களின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். " என்றார்.

அதற்கு நீதிபதிகள், " பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையும், சதிகுறித்த குற்றச்சாட்டு விசாரணையும் தனித்தனியாக நடக்கிறது. பாலியல் குற்றச்சாட்டு பாரபட்சமற்ற  முறையில் விசாரிக்கப்படும் " எனத் தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, " தேவைப்பட்டால், சிறப்பு புலனாய்வு குழுவிசாரணைக்கு பரிந்துரைக்கலாம்" என்றார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், நீதிமன்ற விசாரணைதான் தேவை என்றார்.

அதற்கு நீதிபதிகள் கூறுகையில், " விசாரணை எந்த நோக்கத்தில் செல்கிறது என்று பார்க்கிறோம். தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் கொடுத்துள்ள அந்த பெண்ணிடம் விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்படும். தலைமைநீதிபதியை பதவியில் இருந்து அகற்றுவதற்கு அந்த பெண்ணை சிலர் பகடை காயாகப் பயன்படுத்தி, உட்சவ்பெயின்ஸிடம் சிலர் பேரம் பேசியுள்ளார்கள். அவர்கள் யாரென்று தெரியவேண்டும். அதன் ஆணிவேரை கண்டறிய வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக நண்பகல் 2 மணிக்கு உத்தரவுகளை பிறப்பிக்கிறோம் " என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x