

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வாக்களித்த ஜாட் மற்றும் குஜ்ஜசார் சமூக தலைவர்களை அக்கட்சி மீணடும் தங்கள் அணிக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தினர் சுமார் 12 சதவீத அளவுக்கு உள்ளனர். இதுபோலவே குஜ்ஜார் சமூகத்தினர் 9 சதவீதம் பேர் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த சமூகத்தினர் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அந்த தேர்தலில் பெரும் தோல்வியை பாஜக சந்தித்தது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே குஜ்ஜார் சமூக மக்கள் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தினர். வசுந்தரா ராஜே தலைமையிலான அப்போதைய பாஜக அரசுக்கு எதிராக அவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர்.
அதுபோலவே பாஜகவில் இருந்த ஜாட் சமூக தலைவரான ஹனுமன் பெனிவால் வசுந்தரா ராஜேவுக்கு எதிராக பேசியதால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சியை தொடங்கினார். இந்த இரு சமூகத்தினரும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்தநிலையில் அந்த இரு சமூகத்தினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக தலைவர்கள் சில மாதங்களாகவே ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக குஜ்ஜார் சமூக தலைவர் கிரோரி சிங் பைன்சிலா தனது மகனுடன் சமீபத்தில் பாஜவில் இணைந்தார்.
அதுபோலவே பெனிவாலும் தனது ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் பெரும் வாக்கு வங்கி கொண்ட இரு சமூகங்களை பாஜக தங்கள் பக்கம் கொண்டு வந்து இருப்பதாக கருதப்படுகிறது.