Last Updated : 10 Apr, 2019 03:38 PM

 

Published : 10 Apr 2019 03:38 PM
Last Updated : 10 Apr 2019 03:38 PM

ஆண்டுக் கணக்கில் தேர்தல் என்றால் என்னவென்றே தெரியாத கிராமம்... பசி.. நோய்மையால் நடக்கக் கூட முடியாத மக்கள்

தண்டகாரண்ய கிராமங்கள் இவற்றில் பல தேர்தல் காணாதது, வேட்பாளரைப் பார்த்தே ஆண்டுகள் பல ஆன கிராமங்கள். மத்திய இந்தியாவின் தண்டகாரண்ய வனப்பகுதியில் கிராம அதிகாரியாக பணியாற்றும் 37 வயது விவசாயக் கூலி தான் பதவியை விட்டே ஓடிவிடலாமா என்று யோசிக்கிறார்.

 

மகாராஷ்டிராவின் கட்சிரோலியிலிருந்து 190கிமீ தூரத்தில் உள்ள கஸ்னாசுர் என்ற குக் கிராமத்தின் 123 குடிமக்களுக்கு முன்ஷி மாதவி என்ற இந்த விவசாயக் கூலிதான் பொறுப்பு.

 

ஏப்ரல் 22, 2018-ல் 40 மாவோயிஸ்ட்கள் கிராமத்துக்கு அருகில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிறகே 27 குடும்பங்கள் இங்கே கடும் பீதியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த என்கவுண்டர் ‘கேள்விக்குரியது’ என்று பிற்பாடு சில உரிமைகள் போராளிகள் விமர்சித்ததும் கவனத்துக்குரியது.

 

ஏப்ரல் 11 தேர்தல் நாள், தத்கவானிலிருந்து 8 கிமீ கடும் பயணம் மேற்கொண்டு செல்ல வேண்டிய இந்தக் கிராமத்திற்கு இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய கொண்டாட்டமான தேர்தல் திருவிழா நடப்பதே தெரிந்திருக்கவில்லை.

 

எளிதில் அணுக முடியாத வாக்குச் சாவடிகள்:

 

கிராமத்தினரில் பெரும்பாலானோரிடம் வாக்காளர் அட்டை கிடையாது.  மக்களில் பெரும்பாலானோருக்கு உடல் முழுதும் சிரங்குகள் கொண்ட சரும நோய்,  இன்னும் சிலருக்கு தீரா சரும நோய்கள், மிகவும் பரிதாபகரமான வறுமை, பசி.. அதாவது அருகில் இருக்கும் வாக்குச்சாவடிக்குக் கூட நடக்கக் கூட முடியாத ஒரு வறுமைவாய்ப்பட்ட மக்கள்.

 

‘தேர்தல் நாளன்று சிலர் வருவார்கள் தத்கவான் வாக்குச்சாவடிக்கு நடக்க முடியக்கூடியவர்களை அழைத்துச் செல்வார்கள். அங்கு நாங்கள் என்ன செய்வது என்பதே எங்களுக்குத் தெரியாது’ என்கிறார் மாதவி.

 

வாகனங்கள் கூட செல்ல முடியாத அல்லப்பள்ளி-பாம்ரகாட் சாலையின் முடிவில் இந்த கிராமம் உள்ளது. தண்டகாரண்ய காடுகளுக்கு அருகில் உள்ளது, இங்குதான் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம். இங்கு தேர்தல் வாசனையே கிடையாது, அரசியல் கட்சிகள் இங்கு வாக்குச் சேகரிக்கவும் வருவதில்லை.

 

காட்டுக்குள் ஆழமாகச் சென்றால் வேட்பாளர் என்பவரே ஒரு இல்லாத ஜந்துதான். இங்கு வசிப்பவர்களுக்கு உடலில் சொரி சிறங்கு, படுத்தபடுக்கையாக்கும் தோல் நோய் இவர்கள் வாக்களிக்க நினைத்தாலும் முடியாது.  பெரும்பாலும் ரத்தச் சோகை, வைரல் காய்ச்சல் ஆகியவற்றுடன் வறுமையில் இவர்கள் காலத்தை கழிக்கின்றனர். தலைவலி, காய்ச்சல் எவ்வளவு பெரிய வியாதியாக இருந்தாலும் கோயில் பூசாரி கொடுக்கும் மருந்துதான்.

 

இந்நிலையில் கிராமத்தினர் பாதுகாப்புப் படைக்கு தகவல் அளிக்கும் சந்தேகத்தின் பேரில் 3 பேரை மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்ற அவலமும் நடந்துள்ளது. இது கிராம மக்களிடையே கடும் பீதியைக் கிளப்பியுள்ளது. 2018 என்கவுண்ட்டருக்குப் பிறகு அரசு வாக்குறுதி அளித்த நிவாரணம் இன்னும் வந்து சேர்ந்தபாடில்லை. கட்சிரோலி கலெக்டர், கிராமத்தைத் தத்து எடுத்துக் கொண்ட போலீஸ் உயரதிகாரி ஆகியோர் செய்யும் சிறு உதவி தவிர இப்பகுதிகளில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து சில சிறிய உதவிகள் கிடைத்து வருகின்றன அவ்வளவுதான். மாற்றம், வளர்ச்சி, சேவை செய்யவே பிறந்திருக்கிறேன் என்று தேர்தல் சமயத்தில் கூவும் அரசியல்வாதிகள் எங்கே? என்கின்றனர் சில சமூக ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x