

பிரதமர் மோடியின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள 'பி.எம். நரேந்திர மோடி' திரைப்படத்தை மே19-ம் தேதி வரை திரையிடத் தடை விதித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் 'பி.எம். நரேந்திர மோடி' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியாக நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியாவதாக இருந்தது.
தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தை வெளியிடுவது நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் கடந்த 10-ம் தேதி தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பாளர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'பி.எம்.நரேந்திர மோடி' படத்தை தேர்தல் ஆணையம் பார்த்துவிட்டு படத்தை வெளியிடலாமா? என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும் இதுபற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி, படத்தைப் பார்த்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ‘சீல்’ வைக்கப்பட்ட கவரில் தங்கள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர். அறிக்கையின் நகலை படத் தயாரிப்பாளருக்கு வழங்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக 26-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் சார்பில் 20 பக்கத்தில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "தேர்தல் நேரத்தில் பி.எம். நரேந்திர மோடி படத்தைத் திரையிட அனுமதிப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறானது, மட்டுமல்ல ஒரு கட்சிக்கு சார்பாக அமைந்துவிடும். இத்திரைப்படத்தில் பல காட்சிகள் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஊழல் செய்தவை போன்றும், அந்தக் கட்சிகளை இருளில், தெளிவாக தெரியாத வகையிலும், அந்தக் கட்சிகளின் தலைவர்களின் உருவங்கும் சரியாகத் தெரியாத வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது.
'பி.எம். நரேந்திர மோடி' திரைப்படம் என்பது மோடியின் வரலாற்றை விளக்கும் திரைப்படம் அல்ல. அதையும் தாண்டி ஒரு தனி மனிதரைப் புனிதப்படுத்தி குறிப்பிட்ட அடையாளத்தில், வார்த்தைகளில், புகழந்து எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதலால், கடைசிக்கட்டத் தேர்தல் மே 19-ம் தேதி நடக்கிறது. அந்த வாக்குப்பதிவு முடிந்த பின் மோடி திரைப்படத்தை திரையிட அனுமதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது திரைபடத் தயாரிப்பாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மத்திய திரைப்படத் தணிக்கை அனுமதி அளித்த நிலையில், தேர்தல் ஆணையம் மோடி திரைப்படத்தைத் திரையிட அனுமதி மறுத்துவிட்டதை ஏற்க முடியாது. முரணாக இருக்கிறது என்று வாதிட்டனர்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், "இந்த திரைப்படம் இப்போது திரையிடப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. அந்த முடிவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள மனுவை நாங்கள் இப்போது விசாரிக்க முடியாது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கும் தடை விதிக்க முடியாது" என உத்தரவிட்டனர்.