குறும்பு செய்ததால் மரக்கட்டையால் அடித்த தாய்: 3 வயது சிறுவன் பரிதாப பலி

குறும்பு செய்ததால் மரக்கட்டையால் அடித்த தாய்: 3 வயது சிறுவன் பரிதாப பலி

Published on

குறும்பு செய்துவிட்டு, கீழ்ப்படியாமல் இருந்ததாகக் கூறி 3 வயது மகனை மரக்கட்டையால் அடித்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜார்க்கண்டைச் சேர்ந்தவர் அஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கேரளாவில் வசிக்கிறார். தன்னுடைய 3 வயது சிறுவன் குறும்பு செய்ததாகக் கூறி மரக்கட்டையால் அடித்ததாகக் கூறப்பட்டுகிறது.

சிறுவனின் தலையில் அடிபட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் பலத்த அடியால், கோமா நிலைக்குச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். இடது பக்க மூளை முழுவதும் சேதமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆரம்பகட்ட விசாரணையில் தலையில் அடிபட்டதே இறப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உண்மைக்காரணம் தெரியவரும்.

இதற்கிடையே சிறுவனின் தாய் காவல்துறையால் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர்மீது ஐபிசி பிரிவு 302-ன் (கொலை) கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக புதன்கிழமை இரவு சிறுவன் நாற்காலி மீது தானாகவே மோதி, காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாக சிறுவனின் தந்தை மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிறுவன் மரக்கட்டையால் தாக்கப்பட்டதை அறிந்த மருத்துவர்கள், காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து விவகாரம் பெரிதானது.

தொடர் விசாரணையில் சிறுவனின் தாய்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேரள அரசு, சிறுவனின் அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இதற்கிடையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

ஜார்க்கண்ட் சென்றுள்ள காவல்துறை குழு, குழந்தையின் பெற்றோர், சொந்தப் பெற்றோர்களா என்ற ரீதியில் விசாரணை நடத்திவருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in