Last Updated : 03 Apr, 2019 12:32 PM

 

Published : 03 Apr 2019 12:32 PM
Last Updated : 03 Apr 2019 12:32 PM

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முழுவதும் பொய்கள், கபட வாக்குறுதிகள்: பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை முழுவதும் புழுகுமூட்டைகள், கபட வாக்குறுதிகள் என்று பிரதமர் மோடி காட்டமாகத் தெரிவித்தார்.

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் வரும் 11-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளன. இதற்கான பிரச்சாரத்தில் மாநிலக் கட்சிகளும், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், ஏழைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தது.

இந்நிலையில் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் கிழக்கு மாவட்டம் பாசிகாட் நகரில் இன்று பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது :

தேசத்தை கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. ஆனால், வடகிழக்கு மாநிலங்களைக் குறித்து சிந்திக்கவே இல்லை. இதனால், வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளான சாலைவசதி, போக்குவரத்து வசதி, வளர்ச்சி ஆகிய ஏதும் இல்லை.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளோம். அந்த நம்பிக்கையால் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்துள்ளதாக பார்க்கிறேன்.  சாலைவசதி, போக்குவரத்து, ரயில்போக்குவரத்தை பாஜக அரசு செய்ததால் என் மீது நம்பிக்கை வைத்து இங்கு வந்துள்ளீர்கள். அந்த நம்பிக்கை வீணாகாது.

காங்கிரஸ் கட்சி கடந்த 2004-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 2009-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் மின்வசதி கிடைக்க உறுதி செய்வோம் என்று தெரிவித்திருந்தது. ஆனால், 2014-ம் ஆண்டுவரை 18 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு என்பது சாத்தியமானது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முழுவதும் பொய்கள், இது தேர்தல் அறிக்கை அல்ல மக்களை ஏமாற்ற காங்கிரஸ் கட்சி போடும் கபட நாடகம்.

விவசாயிகளை வாக்குகள், கடன் தள்ளுபடி என்கிற பெயரில் அவர்களை முட்டாளாக்குகிறது காங்கிரஸ் கட்சி. ஆனால், எப்போதும் விவசாயிகளின் நலனுக்காக பாஜக எப்போதும் துணை இருக்கும். விவசாயிகளை ஏமாற்றும் பாவத்தை ஒருபோதும் நாங்கள் செய்யமாட்டோம். விவசாயிகளுக்கு நல்ல புதிய திட்டங்களை நாங்கள்தான் ஏற்படுத்தி இருக்கிறோம்.வரும் மக்களவைத் தேர்தல் என்பது நம்பிக்கை மற்றும் ஊழல், தீர்மானம் மற்றும் சதிக்கு இடையே நடக்கும் தேர்தலாகும்

 இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x