Published : 20 Apr 2019 04:11 PM
Last Updated : 20 Apr 2019 04:11 PM

காங்கிரஸ் பிடிவாதத்தால் கூட்டணி அமைவதில் சிக்கல்: ஆம் ஆத்மி புகார்

டெல்லியில் மட்டும் தான் கூட்டணி என்றால் காங்கிரஸூடன் நாங்கள் கைகோர்க்க வாய்ப்பில்லை என மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணியை உறுதி செய்து, தொகுதிப் பங்கீடு முடிந்து வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

ஆனால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் இரு தரப்பினருக்கும் இரு கருத்துகள் நிலவுகின்றன. இரு கட்சிகளுக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நிலைப்பாடாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்துதான் ஆம் ஆத்மி கட்சி களத்துக்கு வந்தது.

இந்த முறை டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றவிடக்கூடாது என்ற தீர்மானத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் உள்ளன. கடந்த தேர்தலில் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது.

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சியில் ஒருபிரிவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் டெல்லி மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தி வருகிறது. இதனால் கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்தநிலையில், டெல்லி முதல்வர் சிசோடியா கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே காலம் தாழ்த்திவிட்டு தற்போது டெல்லியில் மட்டுமே கூட்டணி வைத்துக்கொள்ள முடியும் என்கிறது, டெல்லியில் மட்டும் கூட்டணி வைப்பது பிரச்சினைக்கு தீர்வாகாது. டெல்லி, ஹரியாணா மற்றும் சண்டிகரில் காங்கிரஸுடன் கூட்டணிக்கு இன்னும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

டெல்லியில் காங்கிரஸூக்கு 3 இடங்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதுபோலவே பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு இடங்களை ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்க முன்வரவில்லை என்றால் கூட்டணிக்கு வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x