மாற்றுக் கருத்துள்ளவர்களை நாம் ஒரு போதும் தேச விரோதிகள் என்று சொன்னதில்லை: மோடிக்கு அத்வானி சூசக அறிவுரை

மாற்றுக் கருத்துள்ளவர்களை நாம் ஒரு போதும் தேச விரோதிகள் என்று சொன்னதில்லை: மோடிக்கு அத்வானி சூசக அறிவுரை
Updated on
1 min read

பாஜகவினால் புறமொதுக்கப்பட்ட மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தன் வலைப்பக்கத்தில் எழுதிய பதிவொன்றில் ‘முதலில் தேசம், அடுத்து கட்சி, தன்னலம் கடைசி’ என்ற தலைப்பில்  பாஜகவின் தற்போதைய கூட்டணியான மோடி, அமித் ஷா கட்சியை நடத்தும் விதம் குறித்து சூசகமான விமர்சனத்தை முன்வைத்தார்.

‘பின் நோக்கு, எதிர் நோக்கு, உள்நோக்கு’ ("look back, look ahead and look within.") அதாவது உனக்குள் தேடு என்று பாஜகவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

காந்தி நகர் தொகுதியில் 6 முறை வெற்றி கண்ட அத்வானி இம்முறை புறக்கணிக்கப்பட்டு அதே தொகுதிக்கு அமித் ஷாவை வேட்பாளராக பாஜக அறிவித்தது. இதனையடுத்து பாஜகவில் ஒரு தரப்பினருக்கு மோடி மீது கடும் அதிருப்தி அடைந்தது.

மோடியின் பாஜக ஆட்சியில் தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் தாக்கப்படுவதும், வழக்குகளைச் சந்திப்பதுமாக இருந்து வருகிறது, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகே நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதல் பற்றி விமர்சன பூர்வமாக யார் பேசினாலும் அவர்களை தேச விரோதிகள் என்று வர்ணிக்கும் போக்கு பாஜகவிடத்தில் நீடித்தது, ரஃபேல் விவகாரத்தில் கடுமையான கேள்விகளை எதிர்க்கட்சிகளும் பத்திரிகையும் கேள்வி எழுப்பிய போதும் இதே தேச துரோக பேச்சு எழுந்தது.

எழுத்தாளர் கல்புர்கி, கர்நாடகா பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்குகள், மொகமது அக்லக் பசு இறைச்சி வைத்திருந்ததாக் கொலை செய்யப்பட்டது, தொடர்ந்து பசுக்குண்டர்கள் ஒரு பிரிவினரை நோக்கி தாக்குவதும் தொடர பாஜக ஆட்சி மீது ‘வெறுப்பரசியல்’ செய்வதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் மூத்த தலைவர் அத்வானியே பாஜகவின் சாராம்சக் கொள்கைகளை விளக்கி தன் பதிவில் எழுதியுள்ளார்.

அதில், “ஜனநாயகம் ஜனநாயக மரபுகளை கட்சிக்குள்ளும், பரந்துபட்ட தேசிய மட்டத்திலும் பாதுகாப்பது என்பது பாஜகவின் பெருமைக்குரிய அடையாளமாகும்.

இந்திய ஜனநாயகத்தின் சாராம்சம்  பன்முகத்தன்மையை மதித்தல், பேச்சு, கருத்து சுதந்திரம் ஆகும். பாஜக தொடங்கியது முதல் நம்முடன் அரசியல் ரீதியாக உடன்படாதவர்களை நாம் விரோதிகளாகப் பார்த்ததில்லை.

அதே போல் இந்திய தேசியம் என்ற நம் கருத்தாக்கத்தில் ஒரு போதும் அரசியல் ரீதியாக நம்முடன் முரண்படுபவர்களை நாம் தேச விரோதிகள் என்று கருதியதில்லை. பாஜக எப்போதும் ஒவ்வொரு குடிமகனின் சொந்த மற்றும் அரசியல் சுதந்திரத் தெரிவு என்பதை கடப்பாடுடன் பாஜக மதித்தது.

சுதந்திரம், ஜனநாயகம், நேர்மை, நியாயம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பதில் பாஜக எப்போதும் முன்னிலையில் இருந்துள்ளது” என்று எழுதியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in