

அரசமைப்பு சாசனத்தை அழிக்க பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அசாமின் சில்சர் பகுதியில் அவர் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் அரசமைப்பு சாசனத்தை அம்பேத்கர் உருவாக்கினார். இதன் அடிப்படையிலேயே நாடு கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசமைப்பு சாசனத்தை அழிக்க முயற்சி செய்து வருகிறது.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நாட்டின் பல்வேறு கலாச்சாரம், மதங்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அரசமைப்பு சாசனத்துக்கும் மதிப்பு அளிக்கப்படவில்லை.
அதேநேரம் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு வார்த்தையும் அரசமைப்பு சாசனத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு செல்கிறார். அந்த நாடுகளின் தலைவர்களை ஆரத் தழுவுகிறார். ஜப்பானில் டிரம்ஸ் இசைக்கிறார்.
ஆனால் சொந்த தொகுதியான வாரணாசிக்காக அவர் 5 நிமிடங்கள்கூட ஒதுக்குவதில்லை. அந்த தொகுதியைச் சேர்ந்த குடும்பங்கள் குறித்து அவருக்கு துளியும் அக்கறை இல்லை. நாடு முழுவதும் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். விவசாயிகள் கடும் துயரத்தில் உள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
இந்திரா காந்தியை மக்கள் இன்றளவும் நினைவுகூருகின்றனர். அதற்கு காரணம், அவர் மக்களுக்காக பாடுபட்டார். வரும் தேர்தலில் மக்களுக்காகப் பாடுபடும் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்.
அசாமுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. மாநிலத்தில் செயல்பட்ட 2 காகித ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அசாம் மாநிலம் பின்தங்கியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான கொள்கைகளால் அசாம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.