ராகுல் காந்தியின் குடியுரிமை சர்ச்சை நாடகத்தனமானது: அமேதி பிரச்சாரத்தில் பிரியங்கா பேச்சு

ராகுல் காந்தியின் குடியுரிமை சர்ச்சை நாடகத்தனமானது: அமேதி பிரச்சாரத்தில் பிரியங்கா பேச்சு
Updated on
1 min read

ராகுல் இந்தியாவைச் சேர்ந்தவரா என்று சர்ச்சைகிளப்பும் விதமாக கேள்விஎழுப்புவது குப்பைத்தனமானதும் நாடகத்தனமானதும் ஆகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அரசாங்கம் ராகுலுக்கு இந்தியக் குடியுரிமை பற்றி கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் குறித்து இக்கூட்டத்தில் பேசினார்.

இன்று அமேதியில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரியங்கா காந்தி பேசியதாவது:

ராகுல் காந்தி ஒரு இந்தியர் என்பது இந்தியா முழுமைக்கும் தெரிந்ததே. அவர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் இந்தியாவில்தான். அப்படியிருக்க ராகுலின் குடியுரிமை குறித்து உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் ஒரு சூழ்ச்சி உள்ளது. நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கிற மிக முக்கியமான பிரச்சினைகளைகளில் இருந்து எல்லாம் மக்களை திசை திருப்பும் மோசமான நோக்கம்தான் அது.  ராகுலின் குடியுரிமை குறித்து என்ன ஒரு மோசமான குப்பைத்தனமானதும் சர்ச்சை இது.

நாட்டின் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. அதற்கு எந்த பதிலும் இல்லை. விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகிறார்கள், சாதாரண வர்த்தகர்கள் மீது வரிவிதிப்பு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இது வரி பயங்கரவாதம் ஆகும். இதற்கெல்லாம் எந்த பதிலும் இல்லை. ஆனால் மக்கள் கவனத்தைத் திசை திருப்ப ஒரு ராகுலைப் பற்றி போலியான கட்டுக்கதையை புனைந்திருக்கிறார்கள். இந்த சர்ச்சை மிகவும் நாடகத்தனமானது.

இவ்வாறு அமேதி மக்களவைத் தொகுதி பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி பேசினார்.

பாஜக எம்பி சுப்பிரமணியன் ஸ்வாமி அளித்த புகாரின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு குடியுரிமை பற்றி கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in