Last Updated : 28 Apr, 2019 12:00 AM

 

Published : 28 Apr 2019 12:00 AM
Last Updated : 28 Apr 2019 12:00 AM

உ.பி.யில் முக்கியத்துவம் வாய்ந்த அவத் பிரதேசத்தில் வேட்பாளர்களை மனதில் வைத்து வாக்களிக்கும் மக்கள்: தொகுதி பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை

உ.பி.யில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அவத் பிரதேசத்தில் தொகுதிப் பிரச்சினைகளைவிட வேட்பாளர்களை மனதில் வைத்தே பொதுமக்கள் வாக்களிக்கின்றனர். இந்தியாவின் இருதயம் எனப்படுவது உத்திரபிரதேசம். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது 17 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய அவத் பிரதேசம்.

மக்களவை தேர்தல் காரணமாக அப்பகுதியில் அரசியல்வாதிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, வான்பகுதியில் அரசியல் கட்சித் தலைவர்களின் ஹெலிகாப்டர்கள் அன்றாடம் வட்டமிடுவது பொதுமக்களுக்கு வேடிக்கையாக உள்ளது. மன்னர்களின் ஆட்சியில் இருந்தே அவத் பிரதேசம் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. சமீப காலத்திலும் இப்பகுதிக்குட்பட்ட தொகுதிகளில் இருந்துதான் பெரும்பாலான பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி.பி.சிங், ராஜீவ் காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மோடி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

நாட்டின் மற்ற பகுதிகளைப் போல, இப்பகுதியிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால், இதைப் பற்றி அப்பகுதி மக்கள் தேர்தல் காலத்தில்கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஏனெனில், பிரச்சினைகளை மறக்கும் அளவுக்கு அப்பகுதிக்குட்பட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் முக்கியத்துவம் பெற்று விடுகின்றனர். இந்த முறை வாரணாசியில் பிரதமர் மோடி, லக்னோவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அலகாபாத்தில் உ.பி. முன்னாள் அமைச்சர் ரீட்டா பகுகுணா ஜோஷி, அமேதியில் ராகுல் காந்தி, ரேபரேலியில் சோனியா காந்தி, சுல்தான்பூரில் மேனகா காந்தி, அயோத்தியில் லாலு சிங் எனப் பட்டியல் நீள்கிறது. மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரும் அவத் பகுதியைச் சேர்ந்தவர்களே.

இதுகுறித்து அவத் பகுதிக்கு உட்பட்ட லக்னோவாசி அஜய் உப்ரிதி ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “இங்குள்ள பிரச்சாரக் கூட்டங்களில் தேசியத் தலைவர்கள் இடம்பெறுவது அதிகம் என்பதால் அவத் பகுதிவாசிகளின் முக்கியத்துவமும் கூடி விடுகிறது. இதனால், தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்சி, சாதி, மதம் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவம் பற்றியே அதிகம் கவலைப்படுகிறார்கள். தொகுதிகளில் உள்ள பிரச்சினைகளை அவர்கள் பெரிதாகக் எடுத்துக் கொள்வதில்லை” என்றார்.

அவத் பகுதிவாசிகளின் மனநிலைக்கு ஏற்ற வகையிலேயே அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கின்றன. அதேபோல, ஒவ்வொரு மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலின் போதும் அங்கு போட்டியிடும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு வெற்றியும் சவாலாகி வருகிறது. இந்தக் காரணத்தாலும் ஆட்சியில் இருக்கும் அரசு, அடுத்து அமைய உள்ள அரசு பற்றியே விவாதங்கள் எழுகின்றன. மக்கள் மற்றும் தொகுதிப் பிரச்சினைகள் அதிகம் பேசப்படுவதில்லை. அடுத்த பிரதமராக வருவது யார்? என்ற பேச்சும் இங்கு அதிகமாக இடம் பெறுகிறது. இப்பகுதிக்கு உட்பட்ட மூன்று தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதம் உள்ளவற்றுக்கு அடுத்த மூன்று கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x