Published : 04 Apr 2019 06:58 PM
Last Updated : 04 Apr 2019 06:58 PM

இந்திய ராணுவத்தை ‘மோடி கி சேனா’ என்று அழைப்பவர்கள் துரோகிகள்: யோகிக்கு வி.கே.சிங் சாட்டையடி பதில்

ஏப்ரல் 1-ம் தேதி காஜியாபாத்தில் தேர்தல் கூட்டத்தில் இந்திய ராணுவத்தை உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் ‘மோடி கி சேனா’ (மோடியின் படை) என்று வர்ணித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்ப, தேர்தல் ஆணையம் யோகிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இந்நிலையில் பாஜக மத்திய அமைச்சரான முன்னாள் ராணுவ ஜெனரல் வி.கே.சிங், பன்னாட்டு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்திய ராணுவத்தை மோடி கி சேனா என்று வர்ணித்தவர்கள் துரோகிகள் என்று சாட்டையடி கொடுத்துள்ளார்.

 

யோகி பேசிய போது, “பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் பிரியாணி போட்டது, மாறாக மோடிஜி  ராணுவம் பயங்கரவாதிகளுக்கு குண்டு போட்டது” என்று பேசினார், இதில் மோடியின் ராணுவம் என்று பேசியது முன்னாள் ராணுவ அதிகாரிகள் உட்பட, சிவில் சமூகம், எதிர்க்கட்சித் தலைவர்கள், தேசபக்தர்கள் பலருக்கும் எரிச்சலைக் கிளப்பி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் யோகி.

 

இந்நிலையில் சக பாஜக அமைச்சருக்கே யோகியின் கூற்று பிடிக்கவில்லை, வி.கே.சிங் பிபிசிக்கு அளித்த பேட்டியில், “பாஜகவுக்காக பிரச்சாரம் செய்பவர்கள் எல்லோருமே தங்களை ராணுவம் என்று கூறிக்கொள்கின்றனர், அவர்கள் எந்த ராணுவத்தைப் பற்றி பேசுகின்றனர்?

 

நாம் இந்திய ராணுவத்தினரைக் கூறுகிறோமா அல்லது அரசியல் கட்சித் தொண்டர்படையைக் கூறுகிறோமா, அவர் கூறிய கூற்றிடம் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் யாராவது இந்திய ராணுவத்தை மோடிஜியின் ராணுவம் என்று அழைத்தால் அது வெறும் தவறு மட்டுமல்ல அவர்கள் துரோகிகளுமாவர்.

 

இந்திய ஆயுதப்படை இந்தியாவுக்கானதே தவிர எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமல்ல.

 

இப்படியெல்லாம் யார் பேசி வருகிறார்கள் என்று தெரியவில்லை, ஒன்றிரண்டு பேர் இப்படிப் பேசி வருகின்றனர், காரணம் அவர்களுக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்று சாடினார் வி.கே.சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x