Last Updated : 24 Apr, 2019 12:00 AM

 

Published : 24 Apr 2019 12:00 AM
Last Updated : 24 Apr 2019 12:00 AM

மக்களவைத் தேர்தலுக்காக டேரா சச்சா பக்தர்களை குறி வைக்கும் கட்சிகள்

வட இந்திய மாநிலங்களில் ’டேராக்கள்’ எனப்படும் சீக்கியர்களின் ஆன்மீக மடங்கள் அதிகம். ஹரியாணா மற்றும் பஞ்சாபில் உள்ள இவற்றின் பக்தர்கள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் உள்ளனர்.

எனவே, ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநில அரசியலில் இந்த மடங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இதில் மிகவும் முக்கியமானது டேரா சச்சா சவுதா எனும் மடம். இதன் தலைவரான குருமித் ராம் ரஹீம் சிங், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளில் சிபிஐ நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் 2017-ல் பஞ்ச்குலாவில் வெளியான போது, பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டு 5 உயிர்கள் பலியாயின. எனினும், அவரது பக்தர்கள் ஒற்றுமையாக இருந்து தங்கள் குருவின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சச்சா சவுதா மடத்தின் பக்தர்களின் வாக்குகள் அந்த மாநில அரசியல் கட்சிகளுக்கு முக்கியம் என்ற நிலை தொடர்கிறது. இதனால், அவர்களிடம் வாக்குகள் பெறவேண்டி சச்ச சவுதாவின் அடுத்த கட்டத் தலைவர்களை அரசியல் கட்சிகள் அணுகி வருகின்றன.

இவர்கள் ஒத்துழைப்பு, அந்த மடத்தினருக்கும் தேவைப்படுகிறது. இதனால், சச்சா சவுதா மடத்தினர் அந்த மாநிலங்களில் 23 இடங்களில் கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஒவ்வொரு கூட்டத்திலும் குருமித்தின் சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு குறையாமல் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சச்சா சவுதா நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘எங்கள் தலைவர் குருமித் கைதாகாமல் இருந்தது வரை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அவரை சுற்றி வந்தனர். இப்போது அவர் சிறையில் உள்ள நிலையில் நிர்வாகிகளிடம் ஆதரவு கேட்டு தூது விடத் துவங்கியுள்ளனர். இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என அனைத்து கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.’’ எனத் தெரிவித்தனர்.

இந்த சந்திப்புகள், மதங்களின் பெயரில் வாக்குகள் கோரக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிகளினால் ரகசியமாக நடந்து வருகின்றன. இதை வழக்கமாக பாஜக-அகாலிதளம் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி மட்டுமே செய்து வந்தன. ஆனால், கடந்த 2017-ல் நிகழ்ந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் முதலாக, ஆம் ஆத்மியும் டேராக்களின் ஆதரவை பெறுவதில் இணைந்துள்ளது.

சச்சா சவுதாவை அடுத்து செல்வாக்கு மிகுந்தததாக சத்சங் எனும் பெயரில் பஞ்சாபின் பியாஸில் ஒரு டேரா உள்ளது. இதன் தலைவர், பாஜக-அகாலிதளம் கூட்டணி ஆட்சியின் கேபினட் அமைச்சராக இருந்தவரது உறவினர் ஆவார்.

இவர் மூலமாக சத்சங் மடத்தின் ஆதரவு பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உ.பி.யின் மதுராவின் பழம்பெரும் டேராவான ராதா சுவாமியின் கிளையும் பஞ்சாபில் உள்ளது. இந்த மடத்துக்கு 2 வருடங்களுக்கு முன் ராகுல் காந்தி சென்று ஒருநாள் தங்கியுள்ளார்.

பஞ்சாபின் பல டேராக்களின் பக்தர்களாக லட்சக்கணக்கான தலித்துகளும் உள்ளனர். இதனால், தலித் சமூக ஆதரவு பெற்ற கட்சியான பகுஜன் சமாஜின் தலைவர் மாயாவதியும் டேராக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x