Published : 09 Apr 2019 01:11 PM
Last Updated : 09 Apr 2019 01:11 PM

அசாமில் ஹோட்டலில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த முஸ்லிம் முதியவர் மீது தாக்குதல்

அசாம் மாநிலம், கவுகாத்தி அருகே ஹோட்டலில் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்த முஸ்லிம் முதியவரை ஒரு கும்பலம் கண்மூடித்தனமாக தாக்கியதால் பெரும்  பதற்றம் உருவாகியுள்ளது.

அந்த முதியவரை பன்றி இறைச்சி சாப்பிடவும் அந்த கும்பல் கட்டாயப்படுத்தியதாக அந்த முதியவரின் சகோதரர் புகாரில் தெரிவித்துள்ளார்.

பிஷ்வாந்த் மாவட்டம், பிஸ்வாந்த் சாரியலி கிராமத்தைச் சேர்ந்தவர் சவுகத் அலி(வயது68). இவர் அங்குள்ள மதுப்பூர் வாரச் சந்தைப்பகுதியல் பல ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகிறார். அந்த ஹோட்டலில் மாட்டிறைச்சி உணவு சமைத்து விற்பனை செய்தும் வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வாரச்சந்தைக்குள் புகுந்த ஒரு கும்பல் திடீரென சவுகத் அலியை கடைக்குள் இருந்து இழுத்துவந்து அடித்து உடைத்துள்ளனர். மாட்டிறைச்சி விற்பனை செய்ததைக் காரணம்காட்டி அடித்தது மட்டுமல்லாமல், சவுகத் அலியை பன்றி இறைச்சி சாப்பிடவும் வற்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, வைரலானது.

இது குறித்து சவுகத் அலியின் சகோதரர் முகமது சஹாபுதீன் போலீஸில் புகார் அளித்தார். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேரை  போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து முகமதுசஹாபுதீன் தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறுகையில், " எங்கள் தந்தை காலத்தில் இருந்து 40 ஆண்டுகளாக மதுப்பூர் சந்தையில் ஹோட்டல் நடத்தி வருகிறோம். இங்கு மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்வது ஒருபோதும் பிரச்சினையாக இருந்தது இல்லை, யாரும் மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்ய தடை செய்யவும் இல்லை.

ஆனால், இப்போது திடீரென மாட்டிறைச்சி உணவு விற்பனை செய்ததாக என் சகோதரரை அடித்து உதைத்துள்ளனர். முறைப்படி எங்களிடம் நோட்டீஸ் அளித்திருந்தால், நாங்கள் மாட்டிறைச்சி உணவு சமைக்காமல் இருந்திருப்போம். அவ்வாறு நாங்கள் சமைத்தால் சட்டப்படி எங்கள்மீது  நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதுமட்டுமல்லாமல் என் சகோதரரை பன்றி இறைச்சி சாப்பிடக்கூறி அந்த கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளனர் " எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து துணைபோலீஸ் ஆணையர் பாபித்ரா ராம் கவுத் கூறுகையில் " சஹாபுதீன் புகார் அளித்த உடனே போலீஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த தாக்குதலில் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சவுகத் அலியை மீட்டு மருத்துவமனையில் போலீஸார் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள். தற்போது அவர் நலமாக இருக்கிறார்.

மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரு சமூகத்துக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுவதை தவிர்க்கும் வகையில் பேச்சு நடத்தப்பட உள்ளது " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x