Last Updated : 13 Apr, 2019 04:41 PM

 

Published : 13 Apr 2019 04:41 PM
Last Updated : 13 Apr 2019 04:41 PM

வேலைவாய்ப்பு, விவசாயிகள், ஊழல் குறித்து மோடி ஏன் பேசுவதில்லை?- ராகுல் காந்தி கேள்வி

நாட்டில் வேலைவாய்ப்பு சூழல், விவசாயிகள் நிலை, ஊழல் குறித்து பிரதமர் மோடி ஏன் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11-ம் தேதி முடிந்த நிலையில், அடுத்த தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் காவலாளி, திருடர் என்பதில் 100 சதவீதம் மாற்றமில்லை. பிரதமர் மோடி ரூ.30 ஆயிரம் கோடி மக்கள் பணத்தை எடுத்து, தன்னுடைய திருட்டு நண்பருக்கு அளித்துள்ளார். நீங்கள் 100 சதவீதம் மக்கள் பணத்தை திருடிவிட்டீர்கள் என்பது உண்மைதான்.

என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. ஏன் அனைத்து திருடர்களும் தங்களின் பெயர்களுக்கு பின்னால் மோடி என்று வைத்துள்ளார்கள். அது நிரவ் மோடியாகட்டும், லலித் மோடியாகட்டும், நரேந்திர மோடியாகட்டும். இன்னும் எத்தனை மோடிக்கள் வெளியே வரப்போகிறார்களோ, நமக்குத் தெரியாது.

நிரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, விஜய் மல்லையா, அனில் அம்பானி, நரேந்திர மோடி ஆகிய அனைவரும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், காவலாளி என்று சொல்லிக்கொள்பவர், ஊழலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமாட்டேன் என்கிறார்.

நான் கேட்கிறேன், மோடி தனது தேர்தல்  பிரச்சாரத்தில் நாட்டில் விவசாயிகள் நிலை, வேலையின்மை நிலவரம், ஊழல் குறித்து பேசுகிறாரா, நான் அவரைப் போல் அல்ல, நாங்கள் பொய் சொல்வதில்லை.

வறுமைக் கோட்டில் இருக்கும் ஏழை மக்களுக்காக குறைந்த பட்ச வருமானம் கிடைப்பதற்காக நியாய் எனும் திட்டத்தை அறிமுகம் படுத்த இருக்கிறோம். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் குறைந்தபட்ச வருமானமாக ஏழை மக்கள் பெற முடியும். இதை நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவை, அரசு வேலை ஆகியவற்றில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவோம்

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x