Published : 26 Apr 2019 07:03 PM
Last Updated : 26 Apr 2019 07:03 PM

நான் அரசியலில் சேர்ந்தால் என் மனைவி என்னுடன் வாழமாட்டார்: ரகுராம் ராஜன் நகைச்சுவை

நான் அரசியலில் சேர்ந்தால், என் மனைவி என்னுடன் வாழமாட்டார் என்று ரிசரவ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.அப்போது ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ரகுராம் ராஜனிடம், நல்ல வாய்ப்பு கிடைத்தால் இந்தியா வருவீர்கள் என்று கூறினார்களே, நல்ல வாய்ப்பு என்று எதைக் குறிப்பிடுகீறார்கள் எனக் கேட்டனர்.

அதற்கு ரகுராம் ராஜன் பதில் அளிக்கையில், " நல்லவாய்ப்பு சிலநேரங்களில் தவறான வழியில்கூட வரலாம். நான் சொல்வது என்னவென்றால் தேவை இருக்கிறதென்றால், பயனுள்ள வகையில் என்னால் உதவ முடியும் என்றால், நான் மகிழ்ச்சியாகச் செய்வேன். சிலநேரங்களில் சிலர் அறிவுரை கேட்கிறார்கள், அதை வழங்குகிறேன் " என்றார்.

அரசியலில் சேரும் எண்ணம் இருக்கிறதா, அல்லது எதிரானவரா என்று கேட்டபோது, ரகுராம் ராஜன் கூறுகையில், " முதலில் என் மனைவி என்ன சொன்னார் என்றால், அரசியலில் மட்டும் நீங்கள் சேர்ந்தால், நான் உங்களுடன் வாழமாட்டேன் என்றுகூறிவிட்டார்" என்று புன்னகையுடன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எனும் தகவல் பரவுகிறதே எனக் கேட்டபோது, " அதுபற்றி பேச நீண்ட காலம் இருக்கிறது. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையைத்தான் இங்கு நான் செய்திருக்கிறேன். பொதுவெளியில் என்னுடைய வேலை மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. என்னுடைய முதன்மை பணி என்பது கல்வி கற்பித்தல். அந்த பணியை விரும்புகிறேன். அதோடுதான் இணைந்திருக்கிறேன். நான் எங்கு இருக்கிறேனோ அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

அரசு சார்பில் யாரேனும் பதவி வழங்கினால் அதை ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு  ரகுராம் ராஜன் பதில் அளிக்கையில், " இது ஊகத்தின் அடிப்படையில் கேட்கும் கேள்வி. என்னுடைய ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதுஒருவேளை தேவையின் காரணத்தால் நீட்டிக்கப்பட்டு இருந்தால், அதை மகிழ்ச்சியுடன் செய்திருப்பேன் " என்றார்.

ரகுராம் ராஜன் ஒருவேளை அரசியல் கட்சி தொடங்கினால், அதாவது, ரகுராம்ராஜன் முன்னேற்றக்கழகம், அல்லது ரகுராம்ராஜன் ஜனநாயகக்கட்சி, அல்லது ரகுராம்ராஜன் சுதந்திரா கட்சி எனத் தொடங்கினால் உங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை எவ்வாறு இருக்கும் என்று கேட்டனர். அதற்கு, ரகுராம் ராஜன் பதில் அளிக்கையில், " இதற்கு பதில் சொல்வது எளிது. நான் அரசியல்கட்சி தொடங்கப்போவது இல்லை. என்னுடைய எழுத்து என்ன என்பதும், கருத்துக்கள் என்ன என்பதும் தெரியும். அதன்படிபார்த்தால் எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. முழுமையாக இல்லை "எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x