

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகார் குறித்த செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கக் கோரும் மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து அதை தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் , நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களை தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கும் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பரிந்துரையின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வில் பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம் பெற்றனர்.
புகார் அளித்த முன்னாள் பெண் ஊழியர் நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் விசாரணைக் குழு முன் நேரில் ஆஜரானார்.
இந்நிலையில் ஊழலுக்கு எதிரான இந்தியக் கவுன்சில் எனும் அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் , தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக் குழு தனது விசாரணையை முடிக்கும் வரை, விசாரணை தொடர்பான எந்த விஷயங்களையும், தகவல்களையும் ஊடகங்கள் வெளியிடவும், நாளேடுகளில் செய்தியாகப் பிரசுரிக்கவும் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி குறித்த செய்திகளை வெளியிடுவது, இந்திய நீதித்துறையின் மாண்பை சீர்குலைத்துவிடும். பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியிடத் தடை விதிக்க வேண்டும்.
இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், டெல்லி அரசு, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, டெல்லி போலீஸ் ஆணையர், வாட்ஸ் அப், கூகுள், யூடியூப், லிங்க்ட்இன், ஸ்க்ரால் இணையதளம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், " இந்த வழக்குகுறித்த விஷயங்கள் அனைத்தையும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டுள்ளது. எந்தவிதமான தலையீடும் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு இருக்கும்போது, இந்த வழக்கில் நாங்கள் தலையிட முடியாது. தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறுங்கள். மனுவை தள்ளுபடி செய்கிறேன்" எனத் தெரிவித்தார்.