

உலகிலேயே நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் எனும் பெருமையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு எழுத்தில் தவறவிட்டது.
சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு பெயர் மாற்றப்பட்டு தற்போது 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்' என்று(Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station) என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் மொத்தம் 57 எழுத்துகள் கொண்ட பெயராக இருந்து வருகிறது.
ஆனால், உலகிலேயே மிக நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் இருக்கிறது. அந்த ரயில் நிலையத்தின் பெயர் 58 ஆங்கில எழுத்துகள் (‘Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch’ ) கொண்டதாகும்.
இந்தப் பெயர்தான் இப்போதுவரை உலகிலேயே மிகப்பெரிய பெயர் கொண்ட ரயில் நிலையம், இந்தச் சாதனையை சென்ட்ரல் ரயில் நிலைய ஒரு ஆங்கில எழுத்தில் தவறவிட்டது. ஒரு வார்த்தை கூடுதலாக சேர்த்திருந்தால், உலகிலேயே நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும்.
இதற்கு முன் இந்தியாவில் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையமாக, ஆந்திராவில் உள்ள வெங்கட நரசிம்மராஜுவாரிபேட்டா(Venkatanarasimharajuvaripeta) இருந்தது. அந்தப் பெருமையை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குக் கிடைத்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை சென்ட்ரல் ரயில் நிலையம், மெட்ராஸ் சென்ட்ரல் ரயில் நிலையம் என்றும் அதன்பின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி முதல் அதிகாரபூர்வமாக 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்' என்று மாற்றப்பட்டு, ஐஆர்சிடிசி இணையதளத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் 2-வது மிகப்பெரிய பெயர் கொண்ட ரயில் நிலையம் பெங்களூருவில் உள்ள கிராந்திவீரா சங்கோலி ராயன்னா பெங்களூரு சிட்டி, ஆனால், மக்கள் சுருக்கமாக பெங்களூரு ரயில் நிலையம் என்று அழைக்கிறார்கள். ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய வீரரின் நினைவாக கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூரு ரயில் நிலைத்தின் பெயர் மாற்றப்பட்டது.
3-வது மிகப்பெரிய பெயர் கொண்ட ரயில் நிலையம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்(சிஎஸ்டி) ஆங்கிலத்தில் (Chattrapati Shivaji Maharaj Terminus) 33 எழுத்துகள் இதில் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டு மகராஜ் என்ற வார்த்தைகூடுதலாகச் சேர்க்கப்பட்டது. பெரும்பாலான மும்பை மக்கள் இதை வி.டி. என்று அழைத்து வருகின்றனர். இதுவரை மும்பை, சென்னை ரயில் நிலையங்களுக்கு 3 முறை பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.