Published : 02 Apr 2019 12:17 PM
Last Updated : 02 Apr 2019 12:17 PM

நீங்கதான் முதல்ல.. அட நீங்க வெளியிடுங்க: ஆந்திராவில் தேர்தல் அறிக்கையை ரகசியம் காக்கும் தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் கட்சி

ஆந்திராவில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில், ஆளும் தெலுங்குதேசம் மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றன.

இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை தயார் செய்து வைத்திருந்தாலும், யார் முதலில் தேர்தல் அறிக்கையை வெளியாடுவார்கள் என்பதற்காக இருகட்சிகளும் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், முதலில் வெளியிடும் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பார்த்து 'காப்பி' அடித்து தங்களின் அறிக்கையில் சேர்க்கலாம் என்று இரு கட்சிகளும் காத்திருப்பதால், தேர்தல் அறிக்கை இதுவரை வெளியாகவில்லை.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவைகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால்,இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிடாததால், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன், தெலுங்குதேசம் கட்சி முதியோர் உதவித்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தியது. ஆனால், ரூ.2 ஆயிரம் திட்டம் என்பது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தங்களின் ஆண்டுக் குழுக் கூட்டத்தில் 'நவரத்னலு' எனும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் இருந்து இந்த திட்டத்தை ஆளும் அரசு காப்பி எடுத்துள்ளது என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.

தெலங்கானா மாநில அரசும் நீண்டநாட்களாக தேர்தல் அறிக்கையை ரகசியமாக வைத்திருந்த நிலையில் வேறுவழியின்றி ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறிக்கையை வெளியிட்டது.

 ஆனால், தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின், 'என் திட்டத்தைப் பார்த்து காப்பி அடித்துவிட்டாய்' என்று டிஆர்எஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையே பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி,  பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி, பிரஜா சாந்தி கட்சி ஆகியவையும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன.

ஆனால், தேர்தலுக்கு இன்னும் நாட்கள் குறைவாக இருக்கும் நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தேர்தல் பொதுக்கூட்டங்களில் மக்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

எந்தவிதமான சமூகத்தினரையும் விட்டுவைக்காமல் ஓய்வூதியதாரர்கள், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், விவசாயிகள் அனைவருக்கும் சலுகைகளை அறிவிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில், 10 முக்கிய வாக்குறுதிகளை அளித்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் கடனுதவி அளிக்கப்படும் என்றார். ஜெகன்மோகன் ரெட்டியோ, 'மாநிலத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் 2.3 லட்சம் பணியிடங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நிரப்பப்படும்' என்றார்.

மேலும், ஏழை மக்களுக்காக 25 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் வாக்குறிதியளித்துள்ளார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவோ, 30 லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன, 20 லட்சம் வீடுகள் புதிதாக கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். இரு கட்சிகளின் தலைவர்களும் வாக்குறுதிகளை அறிவித்துக்கொண்டிருக்கிறார்களே தவிர தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x