

பிரபல பாலிவுட் நடிகரும் எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா, இன்று (சனிக்கிழமை) டெல்லியில் காங்கிரஸ் கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்தார். அப்போது காங்கிரஸ் தேசியச் செயலர் கே.சி.வேணுகோபால் மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் உடனிருந்தனர்.
பாஜகவில் சுமார் 30 ஆண்டுகள் இருந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா. பிஹாரின் பாட்னா சாகிப் தொகுதியில் இருந்து மக்களவைக்கு 2 முறை தேர்வு செய்யப்பட்டவர். இவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை வெளிப்படையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட சத்ருகன் சின்ஹாவுக்கு பாஜக வாய்ப்பு வழங்கவில்லை.
இவருக்குப் பதிலாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பெயரை பாஜக அறிவித்தது. இதனால் அவர் காங்கிரஸில் இணைவார் என ஊகங்கள் எழுந்தன. அதேபோல பாஜகவை விட்டு விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அண்மையில் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார் சின்ஹா. முன்னதாக பாஜகவை விட்டு வெளியேறுவதாக சின்ஹா அறிவித்தபோது, அவரின் மகள் சோனாக்ஷி சின்ஹா வரவேற்றிருந்தார்.
சோனாக்ஷி, ''இந்த முடிவை நீங்கள் முன்னதாகவே எடுத்திருக்கலாம் அப்பா'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.