Last Updated : 10 Apr, 2019 12:00 AM

 

Published : 10 Apr 2019 12:00 AM
Last Updated : 10 Apr 2019 12:00 AM

முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; 91 மக்களவை தொகுதியில் நாளை வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 91 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நாளை தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக வரும் 11-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதன்படி ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத்தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தரபிரதேசம் 8, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என மொத்தம் 91 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இத்தொகுதிகளில் நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகியவை நாளை ஒரே கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இங்கு மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் வரும் நாளை நிறைவடைகிறது. ஒடிசாவில் மட்டும் 28 சட்டப்பேரவை தொகுதிகளில் வரும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. எஞ்சிய தொகுதிகளில் ஏப்ரல் 18, 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

பிரச்சாரத்துக்கு நேற்று கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் இறுதிக் கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். இந்தத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆந்திரா, தெலங்கானாவில்...

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதி மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதேபோல தெலங்கானாவில் 17 மக்களவை தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

ஆந்திராவில் முக்கியமாக தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் பாதிப்பும் இரு கட்சிகளுக்கும் இருக்கும் என கருதப்படுகிறது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண் ஆகியோர் நேற்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரம் முடிந்த நிலையில், வாக்கு மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆந்திராவில் 197 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீஸார், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வாக்கு பதிவு நடைபெற உள்ள இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்க உள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் தேவகவுடா, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் ஆந்திராவில் பிரச்சாரம் செய்தனர்.

ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 2118 பேரும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கு 319 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 3.93 கோடி வாக்காளர்கள் உள்ள ஆந்திராவில் 45,920 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் 443 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக நிஜாமாபாத்தில் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 2.96 கோடி வாக்காளர்கள் உள்ள தெலங்கானா மாநிலத்தில் 34,604 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 13 மாவட்டங்களில் நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்கு பதிவு நடைபெறுகிறது. நிஜாமாபாத் தொகுதிக்கு மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x