

காஷ்மீரில் பாகிஸ்தானியர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் எல்லைப் பகுதிகளில் குடியிருந்த கணவன் மனைவி இருவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் ரஜவ்ரி மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் நேற்று பின்னிரவு வேளையில் பாகிஸ்தானியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அதிகாலை 2.30 மணியளவில் நவ்ஷேரா செக்டரைச் சேர்ந்த கலால் பகுதியில் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த தம்பதிகள் சஞ்சீவி குமார் (32) ரிடா குமாரி (28) ஆகிய இருவர் மீதும் குண்டுகள் பாய்ந்தது.
ராணுவ வீரர்கள் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவருக்கு குண்டு அகற்றப்பட்டு அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் எனினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. எல்லைகளின் இரு பக்கங்களிலிருந்தும் நடைபெற்ற இத்துப்பாக்கிச் சண்டை சிறிதுநேரம் நீடித்தது.
ரஜவ்ரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களின் சர்வதேச எல்லைப் பகுதிகளில் யுத்த நிறுத்த மீறல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 14 புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்தியாவின் விமானப்படை, பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமில் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நேற்று முன்தினம் (வியாழன்) இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் ஏழு பாகிஸ்தானிய நிலைகள் அழிக்கப்பட்டன. இதில் பாகிஸ்தானிய தரப்பில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.