Published : 20 Apr 2019 02:23 PM
Last Updated : 20 Apr 2019 02:23 PM

தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் அதிகம் பயனடைந்தது பாஜக: மொத்தம் ரூ.221 கோடியில் ரூ.210 கோடி பெற்றது

தேர்தல் நிதிப்பத்திரங்கள் அறிமுகப்பட்டதில் இருந்து அதில் பெரும்பகுதி நிதி பாஜகவுக்கே சென்றுள்ளது. கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ரூ.221 கோடியில் ரூ.210 கோடியை பாஜக பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியும், மற்ற கட்சிகளும் மீதமுள்ள நிதியை தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாகப் பெற்றுள்ளன.அதேசமயம், தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் முறை கொண்டுவந்த பின், நன்கொடை  அளிப்பது குறைந்துவிட்டது.

தேர்தல் நிதிப்பத்திரங்கள்

கடந்த 2017-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க தேர்தல் நிதிப்பத்திரங்கள் முறையை அறிமுகப்படுத்தினார். இதன்படி ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக வழங்குபவர்கள் நேரடியாக அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்.

அதற்கு அதிகமாக வழங்குபவர்கள், தேர்தல் நிதிப்பத்திரங்களை வங்கியில் பெற்று வங்கி மூலம் வழங்கலாம். தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் நிதி வழங்குவோர் தங்கள் அடையாளத்தை வெளியிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகள் முடிந்த நிலையில் காங்கிரஸ், பாஜக இரு தேசியக் கட்சிகள் தங்களின் ஆண்டு நிதி அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன. அதில் உள்ள விவரங்களைப் பெற்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின், ரொக்கமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது குறைந்துள்ளது.

அதேசமயம், பெயர் வெளியிடாமல் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கும் அதாவது, ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக தேர்தல் நிதிப்பத்திரங்களில் நிதி அளிப்பது அதிகரித்துள்ளது.

கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் ரூ.221 கோடி நிதியை வங்கியில் இருந்து பெற்றுள்ளன. அதில் ரூ.210 கோடியை பாஜக மட்டும் பெற்றுள்ளது. மீதமுள்ள தொகையில் காங்கிரஸ் கட்சி ரூ.5 கோடியும், பிற கட்சிகள் ரூ.6 கோடியும் பெற்றுள்ளன.

மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ள தகவலில், கடந்த 2017-18 ஆம்  நிதியாண்டில், 520 தேர்தல் நிதிப்பத்திரங்கள் ரூ.222 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. அதில் 511 பத்திரங்களின் மதிப்பு ரூ.211 கோடி என்று தெரிவித்துள்ளது.

ரூ.990 கோடி பாஜகவுக்கு

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் பாஜகவுக்கு ஒட்டுமொத்தமாக தேர்தல் நிதிப்பத்திரங்கள், நன்கொடை வசூல் ஆகியவை மூலம் ரூ.990 கோடி கிடைத்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் ரூ.142.80 கோடியைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமாகும்.

கடந்த 2016-17 ஆம் ஆண்டில் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக நன்கொடை பெற்றதில் பாஜக 66.34 சதவீதம் பெற்ற நிலையில்,இது 2017-18 ஆம் ஆண்டில் பாஜகவின் சதவீதம் 73.49% ஆக அதிகரித்துள்ளது.

பாஜக அளித்துள்ள விவரங்கள்படி, ஒட்டுமொத்த நன்கொடையில் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக 44 சதவீதம் அளித்துள்ளனர். அதாவது, ரூ.438 கோடி கிடைத்துள்ளது. தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக 21.2 சதவீதம், அதாவது ரூ.210 கோடி மீதமுள்ள 35 சதவீதம் ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளது.

இது கடந்த 2016-17 ஆம் ஆண்டில் பாஜகவுக்கு நன்கொடைகள் மூலம் 55.06 சதவீதம், தேர்தல் நிதிப்பத்திரங்கள் அப்போது இல்லை. ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக 47 சதவீதம் கிடைத்துள்ளது. ஆனால், 2016-17 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், ரொக்கமாக பாஜகவுக்கு கிடைக்கும் நன்கொடை அளவு 45 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாகக் குறைந்துள்ளது. பெயரை வெளியிட்டு நன்கொடை வழங்குவோர எண்ணிக்கையும் 53 சதவீதத்தில் இருந்து 44.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கடந்த 2017-18 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக ரூ.142 கோடி நன்கொடை வந்துள்ளது. அதில் 18.7 சதவீதம், ரூ.26.65 கோடி நன்கொடை பங்களிப்பாளர்கள் மூலமும், 3.5 சதவீதம், அதாவது ரூ.5 கோடி தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலமும், ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவான பங்களிப்புகள் 77.71 சதவீதமும் வந்துள்ளன.

கடந்த 2016-17 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடையாக 25.2 சதவீதமும், ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக 74.8 சதவீதமும் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் பெயரை வெளிப்படையாகத் தெரிவித்து நிதியளிப்பவர்கள் அளவும் 6.5 சதவீதம் குறைந்துள்ளது. தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் நிதி வழங்குவது 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் தேர்தல் நிதிப்பத்திரங்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மட்டும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 2017-18 ஆம் ஆண்டில் எஸ்பிஐ வங்கி தேர்தல் நிதிப்பத்திரங்கள் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரையில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது,  ரூ.ஆயிரத்து 56 கோடிக்கு நிதிப்பத்திரங்களை விற்பனை செய்துள்ளது.

குறைந்த மதிப்பிலான தேர்தல் நிதிப்பத்திரங்களுக்கு(ரூ.1000 முதல் ரூ.10000) எந்தவிதமான தேவையும் அதிகமாக இல்லை. ஆனால், அதிக மதிப்பு கொண்ட அதாவது ரூ.10 லட்சம் முதல் ரூ.ஒரு கோடிவரையிலான பத்திரங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு 94 சதவீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தொகையில் 99 சதவீதம் அதிக மதிப்பிலான பத்திரங்கள்தான் விற்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை எஸ்பிஐ வங்கி ரூ.ஆயிரத்து 716 கோடிக்கு தேர்தல் நிதிப்பத்திரங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x