

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் திடீர் மழை, காற்றுக்கு 50பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு குஜராத்திற்கு மட்டும் பிரதமர் நிவாரணம் அறிவித்தது சர்ச்சைக்குள்ளானது.
முதலில் குஜராத் மற்றும் ராஜஸ்தானில்தான் பருவமில்லா கால திடீர் மழை ஒரு புயலாக தாக்கத் தொடங்கியது. இதனால் வீடுகளும் விவசாயப் பயிர்களும் நாசமாகின. இதில் ராஜஸ்தானில் மட்டும் அதிகப்பட்சமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் 15 பேரும் குஜராத்தில் 10பேரும் மகாராஷ்டிராவில் 3 பேரும் இம்மழையினால் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், குஜராத்தில் மழைக்கு பலர் உயிரிழந்துள்ளதும் அதற்கு நிவாரணம் அறிவிக்க வேண்டிய சூழ்நிலை வந்ததற்கும் கடுமையான வேதனையடைகிறேன். என்று வருத்தம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பிரதமரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும்விதமாக ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில் நீங்கள் நாட்டின் பிரதமர் குஜராத் முதல்வரல்ல என்று சாடியிருந்தார்.
பின்னர் பிரதமர் அலுவலகம் ஒரு ட்விட்டை வெளியிட்டது. PM @narendramodi மத்தியப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்த தனது துக்கத்தையே அவர் வெளியிட்டார்.
புயல் மழை தாக்குதல் ஏற்பட்டுள்ள மத்தியப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சத்தை பிரதமர் அறிவித்துள்ளார். இது பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், அரசாங்கம், மழை பாதிப்பு பகுதிகளை உற்று நோக்கி கண்காணித்து வருகிறது. மற்றும் மழை மின்னல் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.