

மத்திய அசாமில் திமாபூர் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 19 பேர் படுகாயமடைந்தனர்.
அசாம் மாநிலத்தின் மோரிகா வோன் மாவட்டம், ஜகிரோடு என்ற இடத்துக்கு அருகே புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இவ்விபத்து நேரிட்டது.
இதில் ரயில் இன்ஜின் மற்றும் 10 பெட்டிகள் தடம் புரண்டன. சுமார் 100 மீட்டர் அளவுக்கு ரயில் பாதை சேதமடைந்தது. விபத்தை தொடர்ந்து இவ்வழியே செல்லும் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. திப்ரூகர் புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் லும்பிங் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த 19 பயணிகள் குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.