Last Updated : 26 Apr, 2019 12:34 PM

 

Published : 26 Apr 2019 12:34 PM
Last Updated : 26 Apr 2019 12:34 PM

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்: மீண்டும் மோடி ஆட்சியைக் கேட்கும் மக்கள் 

உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரமதர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடி வேட்புமனு தாக்கலின்போது, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் உடன் இருந்தனர்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 3 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், உ.பி.யில் உள்ள வாரணாசி தொகுதிக்கு கடைசிகட்டமாக மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. முன்னதாக, பிரதமர் மோடி நேற்று வாரணாசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடனும், பாஜக முக்கியத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோருடன் பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். அதன்பின் இன்று காலை 11.30 மணி அளவில் வேட்பமனு தாக்கல் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்திருந்தார்.

அதற்கு முன்னதாக வாரணாசியில் காலையில் 9 மணி அளவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். அதன்பின் அந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, கால பைரவர் கோயிலில் வழிபாடு செய்த மோடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

பிரதமர் மோடியுடன் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் உடன் வந்தனர்.

மேலும், மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம், நாகாலாந்து முதல்வர் நெய்பு ரியோ, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, ஆகியோர் உடன் வந்தனர்.  

11.20 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர்  வரவேற்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிரோன்மணி அகாலிதளம் கட்சித் தலைவர் பிரகாஷ் சிங் பாதலின் காலில் விழுந்து பிரதமர் மோடி வணங்கினார்.

அதன்பின் தேர்தல் அதிகாரியிடம் பிரதமர் மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி அளித்த வேட்புமனுவை அதிகாரி அமர்ந்தவாறே பெற்றுக்கொண்டார். மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிக்கு பிரதமர் மோடி தலைவணங்கி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியதாவது:

''நாடு சுதந்திரம் பெற்ற பின், ஒரு அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் மக்கள் கேட்பதும், அரசுக்கு ஆதரவான அலை மக்களிடத்தில் உருவாகி இருப்பதும் இதுதான் முதல் முறையாகும். மக்கள் மீண்டும் மோடி அரசுதான் வேண்டும் என்று கேட்கிறார்கள்.

இதற்குமுன் பல்வேறு அரசுகள் ஆட்சி அமைத்துள்ளன . ஆனால், கடந்த 5 ஆண்டுகளாகத்தான் ஒரு நிலையான அரசு அமைந்துள்ளதை பார்த்துள்ளார்கள். நான் ஒரு பிரதமர். யாரையும் சந்திக்கமாட்டேன் என்று ஒருபோதும் கூறியதில்லை.

நான் ஒருபோதும் எந்தத் தொண்டரையும் சந்திக்கமாட்டேன் என்று கூறியதில்லை. எந்தத் தொண்டரையும் நான் சாவதற்கு அனுமதித்தது இல்லை. ஒரு எம்.பி.யாக என்னுடைய கடமையை அறிவேன். பிரதமராகவும் எனது கடமையை அறிவேன்.

பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் எவ்வளவு தூற்றினாலும் நீங்கள் கவலைப்படாதீர்கள். இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெறுகிறேனா என்பதைக் காட்டிலும், ஜனநாயகம் வெல்ல வேண்டும்.

பாஜக தொண்டர்கள் அனைவரும் முதல் முறையாக வாக்களிக்கத் தயாராக இருக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்''.  

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x