ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத வெள்ளம் - ராணுவம் மீட்பு பணி: மக்கள் நெகிழ்ச்சி

ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத வெள்ளம் - ராணுவம் மீட்பு பணி: மக்கள் நெகிழ்ச்சி
Updated on
1 min read

வெள்ளத்தில் சிக்கிப் போராடும் எங்களை இந்திய ராணுவம்தான் காப்பாற்றியது, ராணுவம்தான் எங்களின் பாதுகாவலன் என ஜம்மு பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் உயிரைத் துச்சமென மதித்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகின்றனர். இதுவரை 2.20 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராணுவத்தின் அர்ப்பணிப்பு, ஜம்மு காஷ்மீர் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராணுவத்தின் செயல்பாடுகளை அவர்கள் மனம்திறந்து பாராட்டி யுள்ளனர்.

இது தொடர்பாக ராணுவம் அமைத்துள்ள நிவாரண முகாமில் தனது குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேருடன் தங்கியுள்ள ஷம்மி குமார் கூறும்போது, “எனது வீடு தாவி நதியின் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அனைத்துமே போய்விட்டது. எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. ராணுவம்தான் எங்களை மீ்ட்டு பாதுகாத்தது.

ராணுவம்தான் எங்களுக்கு உணவு வழங்கி, தங்குவதற்கு முகாமும் ஏற்பாடு செய்துள்ளது. ராணுவத்துக்கு நாங்கள் கடன்பட்டி ருக்கிறோம். நாங்கள் வாக்களித்த மாநில அரசு எங்கே போயிற்று? என்றார். தாவி நதியில் இருபுறமும் வெள்ளம் பாய்ந்ததால், ஆற்றுத் தீவாகிவிட்ட 45 குடும்பங்கள் ஐந்து நாட்களாக வெளியேற முடியாமல் தவித்தன. அவர்களை கடந்த 10-ம் தேதி ஒரே நாளில் தற்காலிக உடனடிப் பாலம் அமைத்து ராணு வம் மீட்டது. அதற்காக, அம்மக்கள் ராணுவத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய உயிர்நாடியான ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தொடர்ந்து 12-வது நாளாக முடங்கியுள்ளதால், காஷ்மீர் பகுதியில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசு நிர்வாகம் ஸ்ரீநகரில் மட்டுமே கவனம் செலுத்துவதாக வடக்கு மற்றும் தெற்கு காஷ்மீரில் வாழும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in