

ஓய்வுபெற்ற நீதிபதிகள் குறைந்தது 2 வருடத்திற்காவது வேறு எந்த பொறுப்புகளையும் ஏற்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி தாமஸ் தெரிவித்துள்ளார்.
கேரள ஆளுநராக இருந்த ஷீலா தீட்சித் பதவி விலகியதை அடுத்து, அந்த பதவிக்கு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படும் சூழலில் இந்த கருத்தை கே.டி. தாமஸ் கூறியுள்ளார்.
இது குறித்து தாமஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், " நீதிபதி பொறுப்பு என்பது நுட்பமான ஒன்று, இதனால் நீதிபதியாக இருந்து ஓய்வுபெறுபவர்கள் குறைந்தது 2 வருடங்களாவது அதன் சம்பந்தப்பட்ட பதவிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
நீதிபதியாக இருந்த ஒருவர், அடுத்த பதவியில் நியமிக்கப்படும்போது, அவர் நீதிபதி பதவியில் இருந்தபோது குறிப்பிட்ட அரசுக்கு சாதகமாக நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துவிடக் கூடாது. 2 வருட இடைவெளியாவது எடுத்துக்கொள்வது நல்லது" என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றபோது, தனக்கு வழங்கப்பட்ட தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் பொறுப்பை தான் ஏற்க மறுத்ததாக குறிப்பிட்டு இதனை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.